ஈரோடு : விலைச்சரிவால் சாகுபடி செலவைக்கூட ஈடுகட்ட இயலாத நிலையில் மஞ்சளை விற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர் விவசாயிகள்.
கடந்த ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,000-லிருந்து, ரூ.17,000 வரை விற்பனையானது.
ஆனால் இப்போது ரூ.3,500-லிருந்து, ரூ.4,500 வரை மட்டுமே விற்பனையாகிறது.
கடந்த ஆண்டில் மஞ்சள் விலை அதிகரித்ததன் காரணமாக, ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்தது. இது விலைச்சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன், கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப் பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்படுவது வழக்கம். இங்கு மொத்தப் பாசனப் பரப்பில் 30 சதவீதம் அளவு மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் விலையேற்றம் காரணமாக இப்போது இப்பகுதியில் மட்டும் சுமார் 50,000 ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 30,000 ஹெக்டேர் அளவு மட்டும் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்தது. இதுதவிர கிணற்றுப் பாசனம்
உள்ளவர்களும், தண்ணீர் பாயும் அளவுக்கு மஞ்சளை பயிரிட்டுள்ளனர்.
மஞ்சள் விலை ஏற்றம் காரணமாக உழவு,விதை, கூலி என அனைத்துமே இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவாக ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் இப்போது ஒரு ஏக்கரில் விளையும் மஞ்சள் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரையே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
மஞ்சளை 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். விலைச்சரிவால் விற்க முடியாமல் பரிதவித்து வரும் விவசாயிகளிடம், அரசு மஞ்சளை ஈடாகப் பெற்றுக்கொண்டு, இப்போது விற்கும் விலையில் 80 சதவீதத் தொகையை வட்டியில்லா கடனாக வழங்க முன்வர வேண்டும்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இப்போது மஞ்சள் விலை 300 சதம் சரிந்துள்ளது. மஞ்சள் விலையில் நிலையற்றத் தன்மையைத் தவிர்த்திட, குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். இதன்மூலம் கரும்பு போன்று மஞ்சள் விவசாயிகளிடமும் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
மஞ்சள் வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு, அதிக அளவில் சந்தைக்குக் கொண்டுவரப்படும். அறுவடை காலம் இல்லாத இந்த மாதத்தில் மஞ்சள் கடுமையான விலைச்சரிவை சந்தித்துள்ள நிலையில், அறுவடை காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேலும் விலைச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் மஞ்சள் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.