தொங்கும் தோட்டமாக மாறும் சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை: வங்கக் கடலோரம் 100 ஆண்டுகளைத் தாண்டி, தலை நிமிர்ந்து நிற்கும் சென்னைப் பல்கலைக்கழக கட்டடங்கள் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகின்றன. கட்டடத்தின் மேற்புறத்தில் ஆங்காங்கே செடிகளும், மரங்களும் முள
சென்னை: வங்கக் கடலோரம் 100 ஆண்டுகளைத் தாண்டி, தலை நிமிர்ந்து நிற்கும் சென்னைப் பல்கலைக்கழக கட்டடங்கள் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகின்றன.
கட்டடத்தின் மேற்புறத்தில் ஆங்காங்கே செடிகளும், மரங்களும் முளைத்து பாபிலோனின் தொங்கும் தோட்டம்போல் காட்சியளிக்கிறது.
1857-ல் உருவானது சென்னைப் பல்கலைக்கழகம். முதலில் பேரவை இல்லமும், பின்னர் படிப்படியாக இப்போதைய பிரதான கட்டடம் (தொல்காப்பியர் வளாகம்), மணிக் கூண்டு வளாகக் கட்டடம் என பிற கட்டடங்கள் கட்டப்பட்டன.
Advertisement
செந்நிற வண்ணத்தில் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்தக் கட்டடங்களில் பேரவை இல்லம் 150 ஆண்டுகளைத் தாண்டியும், பிற கட்டடங்கள் 100 ஆண்டுகளைத் தாண்டியும் நிமிர்ந்து நிற்கின்றன.
இந்தோ- சராசெனிக் முறையில் இந்திய, மொகமதிய, ஐரோப்பிய கட்டடக் கலைகளை ஒருங்கிணைத்து அமைத்ததுபோல் கலைநயத்துடன் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்தியாவில் உயர் கல்விக்காக அமைக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் தாய்ப் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது.தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் அல்லாமல் மைசூர் பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கும் சென்னைப் பல்கலைக்கழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
1900-ம் ஆண்டுகளில் 17 துறைகளுடன் செயல்பட்டு வந்த பல்கலைக்கழகத்தில் இப்போது 70-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. குடியரசு முன்னாள் தலைவர் வெங்கட்ராமன், சர்.சி.வி. ராமன், கணித மேதை ராமானுஜம் உள்பட பல்வேறு பெருந்தலைவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளனர்.
இவ்வளவு பெருமைக்குரிய பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த கட்டடங்கள் பராமரிக்கப்படவில்லை என பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொல்காப்பியர் வளாகம், மணிக் கூண்டு வளாகம் என அனைத்து கட்டடங்களின் மேற்புறத்திலும் ஆங்காங்கே செடிகள் பெரிய அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய கூம்பு வடிவங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு எலும்புக் கூடாக நிற்கின்றன.
காரைகள் பெயர்ந்து எப்போது தலை மீது விழும் என்ற அச்சத்தில் பேராசிரியர்களும், மாணவர்களும் எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணிக் கூண்டு வளாகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரைகள் பெயர்ந்து விழுந்ததில், பேராசிரியர் ஒருவரின் கார் சேதமடைந்து, கண்ணாடிகள் நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. இதுபோல் இரு வாரங்களுக்கு முன்பும் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல கோடிகளை செலவழித்து சில அறைகளை மட்டும் நவீனமயமாக்கும் பல்கலைக்கழக நிர்வாகம், பழமைவாய்ந்த கட்டடத்தை புனரமைக்க தயக்கம் காட்டுவது ஏன் என பேராசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது:
பழமைவாய்ந்த இந்தக் கட்டடங்களை சாதாரண கட்டடத் தொழிலாளர்களைக் கொண்டு புனரமைக்க முடியாது. இதற்கென சிறப்பு கட்டடக் கலை நிபுணர்களைக் கொண்டு, பழமை மாறாமல் புனரமைக்கப்பட வேண்டும்.
இதற்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவுடன் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதுவரை 3 ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்துள்ளன. சேதமடைந்த கட்டட பகுதிகள் விரைவில் புனரமைக்கப்படும் என்றார்.