காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பல்கலைக்கழகங்கள் திணறல்
சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய நடைமுறைகளை மாநில அரசு அரசாணையாக வெளியிடாததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் பல்கலைக்கழகங்கள் திணறி வருகின்றன. சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட
சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய நடைமுறைகளை மாநில அரசு அரசாணையாக வெளியிடாததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் பல்கலைக்கழகங்கள் திணறி வருகின்றன.
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஏராளமான பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டும் 70 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல மாதங்களாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 70-க்கும் மேற்பட்ட துறைகளைக் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலம், புவியியல், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 14 துறைகளில் துறைத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. துறைத் தலைவர்கள் பொறுப்பில், அதற்கு கீழ் நிலையில் உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது. இதுபோன்ற காரணத்தால் கல்விப் பணிகளை மேற்கொள்வதிலும், ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Advertisement
உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதி தொடர்பாக புதிய நடைமுறையைய யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதாவது 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்ட குறைந்தபட்ச தகுதி நடைமுறைகளில், திருத்தம் செய்து கடந்த 2010-ம் ஆண்டு புதிய நடைமுறை வெளியிடப்பட்டது.
இதன்படி, பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத தேர்ச்சியுடன், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியர் அனுபவத்தையும், குறைந்தபட்சம் 10 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்க வேண்டும்.
அசோசியேட் பேராசியருக்கு விண்ணப்பிப்வர்கள் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்திருப்பதோடு, குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்க வேண்டும். இதுபோல் கல்லூரி முதல்வர்கள், உதவி பேராசிரியர்கள் ஆகியோருக்கான தகுதியையும் யுஜிசி நிர்ணயம் செய்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகளை அரசாணையாக மாநில அரசு வெளியிடவேண்டும். அப்போதுதான் பல்கலைக்கழகங்கள் அதை நடைமுறைப்படுத்த முடியும்.
ஆனால், இதுவரை புதிய நடைமுறைகள் அரசாணையாக வெளியிடாததால் பணியிடங்கள் நிரப்ப முடியாததற்கு காரணம் என பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எனவே, தமிழக அரசு இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிட்டால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று தெரிகிறது.