முகப்பு
தமிழ்நாடு

'அரசு இணையதளம் முடங்காமல் இருக்க நடவடிக்கை'

சென்னை, செப். 24: தமிழக அரசின் இணையதளம் (www.tn.gov.in) முடங்காமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அளவு கொண்ட (1.5 மெகா பைட்) தகவல்களை மட்டுமே இணையதளத்தில் சேர்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:36 PM
பகிர்:

சென்னை, செப். 24: தமிழக அரசின் இணையதளம் (www.tn.gov.in) முடங்காமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அளவு கொண்ட (1.5 மெகா பைட்) தகவல்களை மட்டுமே இணையதளத்தில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 தமிழக அரசுத் துறைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள், செயல்பாடுகள், அரசு உத்தரவுகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போது வெளியிடப்படும் முக்கிய உத்தரவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு வெளியாகும்போது அதை அனைத்து தரப்பினரும் ஒரே நேரத்தில் பார்க்கின்றனர். இதனால், இணையதளத்தின் சர்வர் செயல்படாமல் நின்று அதை பார்க்க முடியாமல் போகிறது.

 மேலும், ஒவ்வொரு துறையிலும் தரக்கூடிய தகவல்கள் இணையதளத்தில் அதிகளவு இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் உள்ளதாக கருத்து எழுந்துள்ளது. இதைப் போக்கவும், அரசு இணையதளம் முடங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, அரசுத் துறைகளில் இருந்து ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும் தகவல்களும், விவரங்களும் 1.5 மெகா பைட் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இணையதளம் முடங்காமல் சீராக இருப்பதற்கு வகை செய்யப்படும் எனத் தெரிகிறது.

 விடுமுறை நாள்களில் இல்லை: தமிழக அரசு இணையதளத்தை வடிவமைத்து, மேம்படுத்தும் பணிகளை தேசிய தகவலியல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள விவரங்களையும், அதில் கூடுதல் தகவல்களையும் சேர்ப்பது சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்தது. அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டும் தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொள்கிறது.

 சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் முதல்வரின் நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அவை அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. இதற்குக் காரணம், தேசிய தகவலியல் மையம், வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே இயங்குகிறது. இதனால், வாரத்தின் இறுதி நாள்களில் நிகழும் நிகழ்ச்சிகள் எதுவும் அரசு இணையதளத்துக்குள் உடனடியாக வருவதில்லை. இரு நாள்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும், திங்கள்கிழமையே பதிவு செய்யப்படுகின்றன.

 எனவே, தேசிய தகவலியல் மையத்தை வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயங்கச் செய்ய வேண்டும் அல்லது இணையதளத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.