தென்காசி, செப். 27: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசனில் சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சீசன் அருமையாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
÷குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வருவது வழக்கம்.
÷கடந்த நான்கு ஆண்டுகளாக 16 லட்சம் பேர் முதல் 23 லட்சம் பேர் வரை குற்றாலத்துக்கு வருகை தந்துள்ளனர். நிகழாண்டில் இதுவரை 30 லட்சம் பேர் வந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றாலத்தில் நிகழாண்டில்தான் அனைத்து அருவிகளிலும் செழிப்பாக தண்ணீர் விழுந்துள்ளது. ÷தற்போது சீசன் முடிவடைந்த பின்பும், பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.
÷இப்போதும், தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளுக்கு வந்து செல்கின்றனர்.
÷பஜார் பகுதியில் சீசனுக்காக தொடங்கப்பட்ட கடைகள், தற்போதும் செயல்பட்டு வருகின்றன.
இயற்கை கைகொடுத்தது: குற்றாலம் சந்நிதி பஜாரில் உணவகம் நடத்திவரும் வி.சங்கரராமன் கூறியதாவது: எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டில் இயற்கை எங்களுக்கு மிகவும் ஒத்துழைத்தது. பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், கேரளத்தில் ஓணம் பண்டிகை உள்ளிட்டவையாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது என்றார் அவர்.
÷குற்றாலம் - செங்கோட்டை சாலையில் தங்கும்விடுதி நடத்திவரும் எஸ்.சாமிநாதபாண்டியன் கூறியதாவது: போக்குவரத்தில் பாதிப்பு இல்லாமல் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டில் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது என்றார் அவர்.
வெளிநாட்டுப் பயணிகள் குறைவு: எனினும், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் அளவுக்கு குற்றாலத்துக்கு வர வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சுகாதாரத்தில் குறைபாடு, நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும்விடுதிகள் இல்லாதது போன்றவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இன்னும் என்ன தேவை? குற்றாலத்தில் 3 மாத காலமே சீசன் நீடிக்கிறது. எனவே பிற நகரங்களில் உள்ளதுபோல் "தீம் பார்க்குகளை' உருவாக்கவும், கேரள மாநில சுற்றுலா தலங்களில் இருப்பதுபோல் சித்த, ஆயுர்வேத மையங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம். மலையேற்றப் பயிற்சி முகாம்களை நடத்தலாம். இதனமூலம் அதிகமானோர் இங்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
படகு குழாமில் தேவையான அளவு தண்ணீரைத் தேக்கி ஆண்டு முழுவதும் படகு சவாரி செய்யவும், மீன் காட்சியகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப் பகுதியிலுள்ள அணைகள் உள்ளிட்டவற்றை கண்டுகளிக்க தேவையான ஏற்பாடுகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
÷இதன் மூலம் ஆண்டு முழுவதும் குற்றாலத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.