முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 60 நாளில் 1,500 பேருக்குச் சிகிச்சை

சென்னை, ஏப். 11: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 60 நாள்களில் 1,500 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சிகிச்சைக்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:36 PM
பகிர்:

சென்னை, ஏப். 11: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 60 நாள்களில் 1,500 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 இந்தச் சிகிச்சைக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் காப்பீட்டுத் தொகை நோயாளிகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது.

 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கு 20 வகையான அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், அதிக அளவிலான அறுவைச் சிகிச்சைகள் நரம்பியல் துறை டாக்டர்களால் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக கல்லீரல் தொடர்பான அறுவைச் சிகிச்சைகளும், அதற்கடுத்து சிறுநீரக அறுவைச் சிகிச்சை, குடல் அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

 2011 மே 16-ல் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் வரை உள்ள மக்கள், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

 1.34 கோடி மக்கள் பயன்: இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 1.34 கோடி மக்கள் பயன் பெறுவர் என கணக்கிடப்பட்டுள்ளது.

 பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை முறைகள், 23 நோய் கண்டுபிடிப்பு முறைகள் ஆகியவற்றுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும், காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவைச் சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் செலவழிக்கப்பட்ட கட்டணத் தொகை வழங்கப்படும்.

 பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

 இலவச சிகிச்சை: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து 5 நாள்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத் திட்டத்தில் வழங்கப்படும்.

 இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மற்ற விவரங்களை அறிவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் அல்லது 24 மணி நேர இலவச தொலைபேசி சேவையான 180042 53993 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்போது இந்தக் காப்பீடு திட்டத்துக்கான பொறுப்பை யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்று சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

 இது குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் வி.கனகசபை கூறியது: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முதல் அறுவைச் சிகிச்சை பிப்ரவரி 10-ல் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த 1,500 பயனாளிகளும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். சிகிச்சை பெற்ற அனைவரும் அரசு டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments