முகப்பு
தமிழ்நாடு

சிவகாசி பகுதியில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 500 கோடி வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சிவகாசி அருகே உள்ள விஜய்கரிச

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:11 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 500 கோடி வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

சிவகாசி அருகே உள்ள விஜய்கரிசல்குளம், கணைஞான்பட்டி, கோமாளிபட்டி, தாயில்பட்டி, கோட்டையூர், மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், ராமலிங்காபுரம், கோட்டைப்பட்டி, வெம்பக்கோட்டை மற்றும் நகரில் புதுதெரு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த கிராமங்கள் அனைத்திலும் சரவெடி பட்டாசுகளே தயாரிக்கப்படுகின்றன. சரவெடி பட்டாசுகள், திருமண விழா, அரசியல் பிரமுகர்கள் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த வகை பட்டாசு ஆண்டு முழுவதும் விற்பனை நடைபெறுகிறது. சரவெடி பட்டாசுத் தயாரிக்க அலுமினிய பவுடர், சல்பர், பொட்டாசியம் நைட்ரேட் (வெடி உப்பு), கரித்தூசி ஆகியவை மூலப்பொருள்களாக பயன்படுத்தப்படுகின்றன. பழைய காகிதங்களை வெட்டி, அதில் சிகப்பு சாயம் தோய்த்து, குழாய் தயாரிக்கிறார்கள்.

Advertisement

சில பட்டாசு நிறுவனங்கள், வீடுகளில் தயாரிப்பவர்களிடம் மூலப்பொருள்கள் மற்றும் நிறுவன லேபிள்களை கொடுத்து, சரவெடி பட்டாசினை தயாரித்து வாங்கிக் கொள்கின்றனர். கிராமத்தில் குடும்பம் குடும்பமாக இந்த பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இதை, இவர்கள் ஆபத்தாகக் கருதுவதில்லை. அதை ஒரு தொழிலாக நினைத்து, ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடும்பத்துடன் வேலை செய்வதால், இதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

ஆனால், பட்டாசு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டால், அக்கம்பக்கத்தினர் பலரும் பாதிக்கப்படுகின்றனர். போலீஸார் சோதனைக்கு சென்றால், முன்கூட்டியே தகவல் தெரிந்துவிடுவதால், போலீஸார் வருவதற்குள் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இவர்களுக்கு, மூலப்பொருள்கள் விற்பனை செய்வதற்கென சில வியாபாரிகள் உள்ளனர். இவர்கள், வேதியியல் பொருள்களை விற்பனை செய்ய அரசிடம் அனுமதி பெற்றிருப்பதில்லை. ஆண்டு முழுவதும் சரவெடி பட்டாசுத் தயாரிக்கப்படுவதால், இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடியளவுக்கு விற்பனை நடைபெற்று வருவதாக, பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து, சாத்தூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் சின்னையா கூறியதாவது: வாரம் ஒருமுறை சோதனைக்கு செல்கிறோம். நாங்கள் செல்லும்போது, எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த வீட்டில் தயாரிக்கிறார்கள் என குறிப்பிட்டு சரியாகக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்க விஜயகுமார் கூறியதாவது: வீடுகளில் பட்டாசுத் தயாரிப்பு என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதனை தடுக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகத்துக்கு அடிக்கடி கடிதம் எழுதி வருகிறோம். வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் தொழிற்சாலை ஆய்வகத் துறையினர், நாங்கள் உரிமம் பெற்ற ஆலைகளில் மட்டுமே சோதனை செய்வோம் எனக் கூறுகின்றனர்.

இதைத் தடுக்க, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை, தொழிற்சாலைகள் ஆய்வகத் துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.