முகப்பு
தமிழ்நாடு

தனி மின்பகிர்மான வட்டம் உருவாக்கப்படுமா?எதிர்பார்ப்பில் திருவள்ளூர்  மக்கள்

திருவள்ளூர் மாவட்டத்துக்கென தனியாக புதிய மின்பகிர்மான வட்டம்

Updated On : 17 டிசம்பர், 2012 at 6:25 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:26 AM

திருவள்ளூர் மாவட்டத்துக்கென தனியாக புதிய மின்பகிர்மான வட்டம் உருவாக்கப்படுமா என பொதுமக்களும், மின்வாரிய ஊழியர்களும் எதிர் நோக்கி உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரியம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனியாக மின்பகிர்மான வட்டம் உள்ளது. மேற்பார்வைப் பொறியாளரின் கீழ் இயங்கும் மின்பகிர்மான வட்டத்தில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் என பல்வேறு பிரிவுகள் இயங்கும்.

அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் கடந்த 1997-ல் புதிதாக உருவாக்கப்பட்டது. மாவட்டத் தலைநகரான திருவள்ளூரிலேயே ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் உள்பட பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஆனால் மின்சார வாரியத்தை பொறுத்தவரை திருவள்ளூர் மாவட்டத்துக்கு என தனியாக மின்பகிர்மான வட்டம் இல்லாத நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரு மின்பகிர்மான வட்டங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டத்தின் கீழ் திருவள்ளூர், திருத்தணி செயற்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தின் கீழ் திருநின்றவூர், கடம்பத்தூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இவை தவிர பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகங்கள் தண்டையார்பேட்டையில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தின் கீழும், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி மின்வாரிய அலுவலகங்கள் திருமங்கலத்தில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தின் கீழும் இயங்கி வருகின்றன.

Advertisement

கடும் பாதிப்புகள்: திருவள்ளூர், திருத்தணி செயற்பொறியாளர் அலுவலகங்களின் கீழ் மட்டும் 2 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. பழுதான மின் மீட்டரை மாற்றுவது, மின்மாற்றிக்கான உபகரணங்கள் பெறுவது உள்பட பல்வேறு அலுவலக பணிகளுக்கு 65 கி.மீ தூரமுள்ள காஞ்சிபுரத்துக்குத்தான் மின்வாரிய அலுவலர்கள் சென்று வரவேண்டி உள்ளது.

இதே போல் திருநின்றவூர், கடம்பத்தூர் மின்வாரிய அலுவலர்கள் செங்கல்பட்டு சென்று வர நேரிடுகிறது. இதனால் தேவையற்ற காலவிரயம், பணவிரயம் ஏற்படுகிறது. எனவே திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி செயற்பொறியாளர் அலுவலகங்களை இணைத்து திருவள்ளூரில் தனியாக மின்பகிர்மான வட்டத்தை உருவாக்க வேண்டும்.

சுகாதாரமற்ற அலுவலகம்: திருவள்ளூரில் ரயில் நிலையம் அருகே தனியார் கட்டடத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் 80-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இக்கட்டடத்தில் குடிநீர், கழிப்பறை உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. காற்றோட்டமே இல்லாத கட்டடமாக உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி அன்றாடம் பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்து செல்லும் மின் நுகர்வோரும் கடும் சிரமமடைகின்றனர்.

தலையிடுவாரா அமைச்சர்: திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பிவி.ரமணா தலையிட்டு திருவள்ளூரில் தனியாக மின்பகிர்மான வட்டத்தை ஏற்படுத்தி, மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்போதுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்றவோ அல்லது சொந்தமாக கட்டடம் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும், மின்வாரிய ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.