முகப்பு
தமிழ்நாடு

பசுமை வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 2192 பசுமை வீடுகளுக்கு சூரிய ஒளி பேனல்

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 2192 பசுமை வீடுகளுக்கு சூரிய ஒளி பேனல் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்பின்பு தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தபின் அதை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட ரூ.1080 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வீடுகளுக்கு அடித்தளத்தில் மட்டும் சிமெண்ட், செங்கற்கள் பயன்படுத்தப்படும். பக்கவாட்டு சுவர்கள் ஃபைபர் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. இந்த சுவர் எடை குறைந்தது என்பதால் சூறாவளி மற்றும் நில நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலும் அதில் வசிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

30 டிகிரி சென்டிகிரேட் முதல் 80 டிகிரி சென்டி கிரேட் வரை இந்த வீடு வெப்பத்தை தாங்கும். தெர்மோகோலில் உள்ளது போன்ற பொருட்கள் இந்த பைபரில் சேர்க்கப்பட்டுள்ளதால் வெப்பம், குளிர் போன்ற பல்வேறு சூழ்நிலைகளையும் தாங்கக்கூடியதாக இருக்கும்.  ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் ஒரு ஹால் மற்றும் சமையலறை, கழிவறை வசதி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சோலார் அமைப்புகளும் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனால் ஒரு ஏழைக் குடும்பம் பாதுகாப்பாக வாழும் வகையில் பசுமை வீடுகள் மாநிலம் முழுதும் கட்டும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராம சபைகள் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பசுமை வீடும் ரூ.1.8 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதில் ரூ.30 ஆயிரம் சூரியஒளி கட்டமைப்பு கருவிகள் பொருத்த வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 2011-12-ம் நிதி ஆண்டில் மொத்தம் 2192 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றில் சூரிய ஒளி கட்டமைப்பு கருவி, பேனல் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை 350 வீடுகளில் சூரிய ஒளி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள வீடுகளிலும் சூரியஒளி கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுவிடும்.

சீன நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இப்பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அறையிலும் 9 வாட் சக்தி கொண்ட சிஎப்எல் விளக்குகள் சூரியஒளி உதவியுடன் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி கட்டமைப்பு கருவிகளுக்கு 5 ஆண்டு காலம் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800021224-ஐ தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டு பயனாளிக்கும் தனித்தனியாக பதிவு எண் கொண்ட பராமரிப்பு அட்டை தரப்பட்டுள்ளது.

கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக ஏழைகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் பசுமை வீடுகளில் சூரிய ஒளி கட்டமைப்பு கருவி பொருத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டு 2012-13-ல் 2182 பசுமை வீடுகளில் சூரிய ஒளி கட்டமைப்பு கருவி பொருத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.