முகப்பு
தமிழ்நாடு

இருந்தும் பயனில்லாத எம்.எல்.ஏ. அலுவலகம்

பொன்னேரி, பிப். 10: பொன்னேரியை அடுத்த சக்தி நகரில், இருந்தும் பயனில்லா நிலையில் அமைந்துள்ள பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து நகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற க

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:36 AM
பகிர்:

பொன்னேரி, பிப். 10: பொன்னேரியை அடுத்த சக்தி நகரில், இருந்தும் பயனில்லா நிலையில் அமைந்துள்ள பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து நகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் எளிதாகச் சென்று வரமுடியாத இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் அது இருந்தும் பயனில்லாத நிலையில் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய மூன்று பேரூராட்சிகளும், மீஞ்சூர், சோழவரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

Advertisement

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து மேற்குப் பக்கமாக கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், கல்லூரி, நீதிமன்றங்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல்நிலையம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

மேலும் பொன்னேரியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 3 திரையரங்குகள், 3 தேசிய வங்கிகள் ஆகியவையும் ரயில் நிலையத்தில் இருந்து மேற்குப் பக்கமாக அமைந்துள்ளன.

ரயில் நிலையத்தில் இருந்து கிழக்குப் பக்கமாக உள்ள சக்தி நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொன்னேரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் ஆலாடு கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று வர வேண்டும் என்ற நிலை உள்ளது. பொன்னேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராஜா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் எம்.எல்.ஏ. அலுவலகத்தைத் திறந்து வைத்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பெற ஊழியர் ஒருவரை நியமித்தார்.

மனுக்கள் வரவில்லை... பொன்னேரி நகரில் உள்ள மையப் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டப்படாமல் சக்தி நகர் பகுதியில் கட்டப்பட்டதன் காரணமாக எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் பொன்னேரியை அடுத்த சக்தி நகரில் அமைந்துள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் இருந்தும் பயனற்ற நிலையில் உள்ளது.

இது குறித்து பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்.ராஜாவிடம் கேட்டபோது, "எம்.எல்.ஏ. அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருந்த போதும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் கோரிக்கை மனுக்களை அளிக்க பொதுமக்கள் யாரும் வருவதில்லை.

மேலும் அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக' தெரிவித்தார்.

பொதுமக்கள் கோரிக்கை... பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பொன்னேரி நகரின் மையப் பகுதியில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.