தமிழ்நாடு

மிருதங்க வித்வான் வேலூர் ராமபத்ரன் காலமானார்

தினமணி

சென்னை, பிப்.27: பிரபல மிருதங்க வித்வான் வேலூர் ராமபத்திரன் (83) சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.

 கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

 1929-ல் வேலூரில் பிறந்த ராமபத்ரன், 1942-ல் தமது 13-ம் வயதில் அன்றைய கர்நாடக சங்கீத உலகில் முன்னணிக் கலைஞரான மதுரை மணி ஐயருக்கு பக்கவாத்தியம் வாசித்து தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்பிரமணிய அய்யர், ஜி.என்.பி, துவாரம் வெங்கடசாமி நாயுடு, டி.ஆர்.மகாலிங்கம், ஆலத்தூர் சகோதரர்கள் போன்ற மூத்த கலைஞர்கள் முதல் இன்றைய தலைமுறை இளம் கலைஞர்கள் வரை அனைவருக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

 கர்நாடக இசையுலகின் உயரிய விருதான சங்கீத கலாநிதி முதல், நாதப் பிரம்மம், சங்கீத சூடாமணி, கலைமாமணி, தாளவிலாஸ், செüடய்யா விருது, சங்கீத நாடக அகாதெமி விருது என பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். இவரை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், நாதபத்ரன் என்றே அழைப்பாராம்.

 இளம் கலைஞர்கள் பலரை முன்னுக்குக் கொண்டு வருவதில் பெரிதும் ஆர்வம் காட்டியவர்.

 அவரது மறைவு குறித்து மூத்த கர்நாடக இசைக்கலைஞர் பி.எஸ்.நாராயணஸ்வாமி கூறியது:

 இசையுலகுக்குப் பெரும் இழப்பு என்பதுடன், அவரது மறைவால் ஒரு நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன். வயதில் என்னைவிடப் பெரியவரானாலும் கடந்த 55 வருடங்களாக நண்பர்களாக நாங்கள் நெருங்கிப் பழகினோம்.

 கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஒரு நாள்கூட ஓய்வில்லாமல் மிருதங்கம் வாசித்து வந்துள்ளார். அவரைப் பின்பற்றி வாசித்தவர்கள் ஏராளம். அவருடைய பாணிதான் அவர் விட்டுச் செல்லும் செல்வம் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT