முகப்பு
தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

அம்பாசமுத்திரம், ஜூலை 4: இயற்கைப் புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை, உலகின் மிகச் சிறந்த பாரம்பரிய இடமாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான கலாசார அமைப்பால் (யுனெஸ்கோ) அங்கீகரிக

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், ஜூலை 4: இயற்கைப் புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை, உலகின் மிகச் சிறந்த பாரம்பரிய இடமாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான கலாசார அமைப்பால் (யுனெஸ்கோ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் என 6 மாநிலங்களில் பரந்து விரிந்துள்ளது. மழைக்கு ஆதாரமாக இருக்கும், பல்லுயிரின காப்பகமாகத் திகழும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையைத்தான் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

 இந்த மலையின் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமான களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. 895 சதுர கி.மீ. பரப்பளவில் உலகளவில் மிகச்சில பல்லுயிர் செறிந்த வாழ்விடங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் அகத்திய மலை உள்ளது.

 அகத்திய மலையின் அங்கமாக இங்கு அமைந்துள்ள களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகம் 2000-க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்கிட், அக்லையா போர்டிலானை, க்குளூட்டா ட்ரவான்கோரிக்கா போன்ற 100-க்கும் மேற்பட்ட அரிய தாவர வகைகள், சிங்கவால் மந்தி, காந்தக் கீரி, முள்ளெலி, நீலகிரி வரையாடு மற்றும் 120 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட தவளையான மெலனோபேட்ராக்கஸ் இண்டிக்கஸ் போன்றவையும் இங்கு உள்ளன. இது தவிர 273 வகை பறவையினங்கள், 200 வகையான ஊர்வனங்களும் இங்கு வாழ்கின்றன.

 காப்பகத்தின் மேற்கு திசையில் கேரளத்தின் நெய்யாறு, பெப்பாரா, செந்துறுனி, வடக்கு திசையில் திருநெல்வேலி காப்புக்காடு, தெற்கே கன்னியாகுமரி ஆகியன சரணாலயத்தோடு இணைந்துள்ளது. எழில்மிகு அகத்திய மலையானது 2000 சதுர கி.மீ. துண்டாடப்படாத அடர்ந்த வனத்தை மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் கொண்டுள்ளது.

 மலைச்சிகரங்கள் நிறைந்த இங்கு அமைந்துள்ள புலிகள் காப்பகம் கடல் மட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர், அதிகபட்சம் 1700 மீட்டர் உயரத்திலும், இப்பகுதியில் மிக உயர்ந்த சிகரமான அகத்தியமுடி எனும் பொதிகை மலை 1896 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. நாட்டின் பருவமழையைத் தீர்மானிக்கும் சக்தியாக மேற்குத் தொடர்ச்சி மலை திகழ்கிறது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு என இரு பருவமழைக் காலங்களில் இங்கு மழை பொழிகிறது. இதனால் உயிரோட்டம் பெற்ற எண்ணற்ற நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.

 பல ஆறுகளை தன்னகத்தே கொண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் பூங்குளம் என்ற இடத்தில் தாமிரவருணி நதி உற்பத்தியாகிறது. இது தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர், பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யும் உயிர் நாடியாகத் திகழ்கிறது.

 இங்கு மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, குதிரைவெட்டியில் தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளன.

 மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்தால்தான ஜப்பான் நாடு செழிக்கும் என்பதால், அந்நாட்டு உதவியுடன் பல லட்சம் மரக்கன்றுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகத்தில் நடப்பட்டன. இங்கு வன வளங்களும், வன விலங்குகள், தாவரங்களும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் சூழல் மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

 உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அரிய பகுதிகள் தமிழகத்தில் அமைந்திருப்பதும் பெருமை தரும் விஷயமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →