முகப்பு
தமிழ்நாடு

அவல நிலையில் கிளை நூலகம்

நாமக்கல்: பன்றிகள் கூட்டம் சுற்றித் திரியும் இடத்திலும், இடப் பற்றாக்குறையிலும் சேந்தமங்கலம் கிளை நூலகம் தவித்துக் கொண்டுள்ளது. இதனால், வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கவனத்தில் கொண்டு, அந்த நூல

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:40 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:12 PM

நாமக்கல்: பன்றிகள் கூட்டம் சுற்றித் திரியும் இடத்திலும், இடப் பற்றாக்குறையிலும் சேந்தமங்கலம் கிளை நூலகம் தவித்துக் கொண்டுள்ளது. இதனால், வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கவனத்தில் கொண்டு, அந்த நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள கிளை நூலகக் கட்டடம் கடந்த 1994-ம் ஆண்டில் கட்டப்பட்டது. 22 சென்ட் அரசு நிலத்தில் சுமார் 3 சென்ட் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில், அப்போது சுமார் 5 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. சராசரியாக நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் மட்டுமே வந்து சென்றனர்.

 ஆனால், தற்போது அந்த நூலகத்தில் தமிழ், இலக்கியம், இலக்கணம், அறிவியல், நாவல், சுற்றுச்சூழல், வரலாறு, கணிதம், ஆங்கில இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் 21,695 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவு பெறுவதற்காக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் நூலகத்தை நாடி வருகின்றனர்.

Advertisement

 இந்த நிலையில், நூலத்தைச் சுற்றி பன்றிகள் அதிகளவில் மேய்வதும், அதற்கு வசதியாக சாக்கடை கழிவுநீர் திறந்த வெளியில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதாலும், நூலகத்துக்கு வரும் வாசகர்களை மனதளவிலும், உடல் ரீதியாகவும் பெருமளவில் பாதித்துக் கொண்டுள்ளது.

 தவிர, நூலகம் அமைந்துள்ள இடம் வீடுகள் நிறைந்த மற்றும் அருகில் கோயில் உள்ள பகுதியாக இருப்பதால் புத்தகங்கள் படிப்பதற்குத் தேவையான அமைதியும் இல்லை.

 இதற்கிடையே, புத்தகங்களை வைப்பதற்கு தேவையான அளவில் கட்டடத்தில் வசதிகள் இல்லாததால் வாசகர்கள் வசதியாக அமர்ந்து படிக்க போதிய இடப்பற்றாக்குறையும் காணப்படுகிறது. இந்தக் குறைபாடுகள் காரணமாக வாசகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதுடன், படிப்படியாக வாசகர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் எம். வரதராஜன் கூறியது:

 நூலகத்துக்குத் தேவையான அமைதியையும், சுகாதாரமான சூழ்நிலையையும் சேந்தமங்கலம் முற்றிலும் இழந்துள்ளது. பன்றிக் கூட்டத்தாலும், சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதாலும் நூலகத்துக்குள் துர்நாற்றம் வீசுகிறது.

 மேலும், நூலகத்துக்குள் இடப் பற்றாக்குறையுடன், கட்டடத்தின் மேற்கூரையும் பழுதடைந்த நிலையில் பெயர்ந்து தொங்கிக் கொண்டுள்ளது. நூலகத்தை அமைதியான சூழ்நிலையில் உள்ள கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.

 சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், கடந்த 8 ஆண்டுகளாக அருகிலுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து வருகிறது. அந்தக் கட்டடத்தை சீரமைத்து, நூலகக் கட்டடமாக பயன்படுத்தவோ அல்லது நகரில் பயன்பாடின்றிக் காணப்படும் வருவாய்த் துறை, ஊராட்சி ஒன்றியக் கட்டடங்களை ஆராய்ந்து தகுதியான இடத்துக்கு நூலகத்துக்கு இடமாற்றம் செய்திட நூலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேந்தமங்கலம் பகுதி வாசகர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.