முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்பான சுற்றுலாத் தலமாகிறது பழவேற்காடு

சென்னை, ஜூன் 11: வரலாற்று சிறப்புமிக்க பழவேற்காடு பகுதியை பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகிறது.  இங்குள்ள ஏரியில் தொடர் படகு

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:41 AM
பகிர்:

சென்னை, ஜூன் 11: வரலாற்று சிறப்புமிக்க பழவேற்காடு பகுதியை பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

 இங்குள்ள ஏரியில் தொடர் படகு விபத்து ஏற்பட்டு, அதனால் பலர் உயிரிழப்பதை தடுப்பதற்காகவும் இந்த புதிய வியூகத்தை அரசு கையாள்வதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த ஆண்டு டிசம்பர் 25-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக மீன் பிடிப் படகில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்துக்குப் பின்னர், ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுவரை இத் தடை நீடித்து வருகிறது.

Advertisement

 இந்த நிலையில், பழவேற்காடு பகுதியை பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி, ஏரியில் பாதுகாப்பான படகு சவாரியை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

 இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்தி அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாற்றுவதற்காக, ஆய்வு மேற்கொள்ள தனியார் அமைப்பு ஒன்றை சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நிர்ணயித்துள்ளது. இந்த அமைப்பு 15 நாள்களில் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது என உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 நூற்றாண்டு வரலாறு: பல நூற்றாண்டு வரலாற்றை தாங்கி நிற்கின்றது பழவேற்காடு. சென்னையிலிருந்து வடக்குப் பகுதியில் 59 கி.மீ. தொலைவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

 தமிழகத்தில் சோழப் பேரரசின் ஆட்சியில் 10-ம் நூற்றாண்டு முதலே, இந்தப் பகுதி மிகப் பெரிய வர்த்தக மையமாக விளங்கியுள்ளது.

 கி.பி. 661-ல் யுசுஃப் பின் ஹஜாஜ் ஆட்சியின்போது, அரேபிய முஸ்லிம்களும், பின்னர் போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும் இங்கு வந்து வர்த்தகம் செய்துள்ளனர். கி.பி. 1616-ல் டச்சுகாரர்களின் இந்திய தலைநகராக பழவேற்காடு மாறியுள்ளது.

 இறுதியாக கி.பி. 1619-ல் இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் பழவேற்காடில் வர்த்தகம் செய்துள்ளனர். இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், டச்சுகாரர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

 இப்படி, பல நூற்றாண்டு வரலாறு பொதிந்து கிடக்கும் பழவேற்காடை அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சியை தமிழக அரசு இப்போது மேற்கொண்டு வருகிறது.

 இந்தப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வரும் தனியார் அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பாழடைந்து புதர் மண்டிக் கிடந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்து கோயில்கள் மற்றும் கோட்டைகளைக் கண்டறிந்துள்ளது.

 விஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது பழவேற்காடில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆதி நாராயண பெருமாள் கோயில் கண்டறியப்பட்டுள்ளது.

 750 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த இந்தக் கோயில் இப்போது புனரமைக்கப்பட உள்ளது. இதுதவிர சமயேஸ்வரர் கோயில் உள்ளிட்ட மேலும் சில பழமைவாய்ந்த கோயில்களும் கண்டறியப்பட்டுள்ளன.

 டச்சு அரசின் கோட்டையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையிலிருந்து கற்களை மக்கள் எடுத்துச் சென்று விட்டதால், கோட்டை மிகவும் பாழடைந்த நிலையில் புதர் மண்டிக் கிடக்கின்றது. இதை சுத்தம் செய்து, புனரமைத்தால் பல நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றை நாம் அறிய முடியும் என்கிறார் ஆய்வில் ஈடுபட்டு வரும் தனியார் அமைப்பின் நிர்வாகி.

 இப்பகுதியில் 450 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள உவர்ப்பு நீர் ஏரியில் பாதுகாப்பான படகு சவாரி செய்வதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பல்வேறு நாட்டுப் பறவைகள் வந்து செல்வதை, தொடர்ந்து உறுதி செய்யும் வகையில் பல்வேறு விதமான மரங்களைப் பாதுகாப்பதோடு, புதிய தாவரவியல் பூங்கா உருவாக்குவதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரி கூறியது:

 பழவேற்காடை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான ஆய்வை மேற்கொண்டு வரும் தனியார் அமைப்பு 15 நாள்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். சுமார் 20 வகையான கட்டமைப்புகளை உருவாக்கும் வகையிலான ஆய்வை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் அறிக்கை கிடைத்த பின்னர் ஒப்பந்தம் மூலம், குறிப்பிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

 அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் முடிந்து, பழவேற்காடு சுற்றுலாவுக்கு தயாராகிவிடும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.