சிறை-தீயணைப்பு உள்பட காவல் துறையில் 6,756 காவலர்கள் தேர்வு: அடுத்த வாரம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 2: சிறை-தீயணைப்புத் துறைகள் உள்பட தமிழகக் காவல் துறையில் 6 ஆயிரத்து 756 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை அடுத்த வாரத்தில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டா
சென்னை, மார்ச் 2: சிறை-தீயணைப்புத் துறைகள் உள்பட தமிழகக் காவல் துறையில் 6 ஆயிரத்து 756 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை அடுத்த வாரத்தில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, சிறை, தீயணைப்பு என பல்வேறு துறைகளுக்கு உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை, 1 லட்சத்து 12 ஆயிரத்து 363 பணியிடங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 95 ஆயிரத்து 745 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 16 ஆயிரத்து 618 பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: காவல் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதல்கட்டமாக 6 ஆயிரத்து 756 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாக உள்ளது. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கு நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வாணையத்திடம் இருந்து அறிவிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகக் கூடும் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வயது-உயரம் விவரம்: பொதுப்பிரிவினருக்கு 20 வயது பூர்த்தியாகி இருப்பதுடன், அவர்களது வயது 28 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 வயது பூர்த்தியாகி 30 வயதுக்குள் மிகாமல் இருப்பது அவசியம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 20 வயது பூர்த்தியாகி 32 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
ஆண்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு உயரம் 170 சென்டிமீட்டராகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 159 சென்டிமீட்டரும் உயரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 159 சென்டிமீட்டரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 157 சென்டிமீட்டரும் உயரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏமாற வேண்டாம்: காவலர்கள் தேர்வு, தகுதி அடிப்படையிலேயே நடைபெறுவதாக சீருடைப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்க முயல்வோர் நடவடிக்கைகளுக்கு துணை போக வேண்டாம் என்றும், அவ்வாறான நபர்கள் பற்றி தகவல்கள் தெரிவிக்க தனி தொலைபேசி எண் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர். புகார்களை 044-28413654 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.