சிதிலமடைந்த தெலுங்கு கங்கை கால்வாய் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சிதிலமடைந்து கிடக்கும் தெலுங்கு கங்கை கால்வாய் கரைகளைச் சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர மக்களின
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சிதிலமடைந்து கிடக்கும் தெலுங்கு கங்கை கால்வாய் கரைகளைச் சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 15 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை விநியோகம் செய்வதற்காக தெலுங்கு கங்கை கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆந்திர-தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கி.மீ. தூரம் இக்கால்வாய் வருகிறது.
கோடைக்காலத்தில் சென்னை மாநகருக்கு தெலுங்கு கங்கை கால்வாய் வழியாகத் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 8.6 மீ அகலம் கொண்ட இக்கால்வாயில் தண்ணீர் சீராகச் செல்வதற்காக இருபுற கரைகளிலும் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கால்வாய் கரைகளை பலப்படுத்தும் வகையிலும் உள்ள இவை பல்வேறு இடங்களில் உடைந்துள்ளன. குறிப்பாக ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி செல்லும் வழியில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், போந்தவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 கி.மீ. தூரம் கால்வாய்க்கரை சிதிலமடைந்துள்ளது.
கோடைக்காலத்தின் போது சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இக்கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீர் விடப்படும். அதற்குள் சிதிலமடைந்துள்ள கால்வாய்க் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.4.57 கோடி ஒதுக்கீடு: இது தொடர்பாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த மழைக்காலத்தின் போது கால்வாய் கரைகள் பாதிக்கப்பட்டன. இதனால் தான் சிமெண்ட் கற்கள் பெயர்ந்து விட்டன. ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரை கால்வாயைச் சீரமைக்க அரசு ரூ.4.57 கோடி ஒதுக்கி உள்ளது. விரைவில் அப்பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.