சேலம், மார்ச் 17: பிளஸ்-2 இயற்பியல் தேர்வில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமாக இருந்த கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மொழிப்பாடங்கள் முடிந்த நிலையில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். தேர்வறையில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்ததைக் காண முடிந்தது.
குறிப்பாக 10 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அபிநயா, இந்துமதி, கோபிகாஸ்ரீ ஆகியோர் கூறியது:
பெரும்பாலான கேள்விகளை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வித்தாளைக் கண்டதுமே தேர்ச்சி பெறுவோமா என்ற அச்சம் ஏற்பட்டது. 10 மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இல்லாதவையாக இருந்தன. ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே எளிதானதாக இருந்தன.
இதனால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்படும் தகுதி மதிப்பெண்ணை பெறுவோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இயற்பியல் தேர்வில் "கேட்கப்பட்ட', புத்தகத்தில் இல்லாத கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் அளிக்கவேண்டும் என்றனர்.
சேலம் சாரதா பாலமந்திர் பள்ளி மாணவன் பிரசாத், கோகுலநாத ஹிந்து மகாஜன மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதிக் பாட்ஷா, கார்த்திக் ராஜா, ஷாம் ஆகியோர் கூறியது:
இயற்பியல் வினாக்கள் தியரி வடிவில் பதில் அளிப்பவையாக இருந்தன. பெரும்பாலான வினாக்கள் நாங்கள் எதிர்பாராதவை. எனவே மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றனர்.
இது குறித்து முதுநிலை இயற்பியல் ஆசிரியர் சங்கர் கூறியது:
மாணவர்கள் முதலில் 10 மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கவே எண்ணுகின்றனர். இயற்பியல் தேர்வில் 10 மதிப்பெண் வினாக்கள் அவை பரிச்சயமில்லாததுபோல் தோற்றம் அளித்ததால் அவர்கள் மனமுடைந்தனர். இதனால் பலரால் மேற்கொண்டு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது.
பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்களுக்கு இந்த வினாத்தாள் கடினம்தான். இருப்பினும் அனைத்துப் பாடங்களையும் படித்தவர்கள், அடிக்கடி மாதிரித் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் (சென்டம்) பெற முடியும். அவர்களுக்கு கேள்விகளைப் புரிந்து கொள்ள மட்டும் அதிக நேரம் தேவைப்பட்டது.
சராசரியாக மாணவர்கள் எதை விலக்கி விட்டுப் படிப்பார்களோ அந்த வினாக்களே இடம் பெற்றிருந்தது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றார்.
"சென்டம்' குறையுமா?
இயற்பியல் தேர்வில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2011-ம் ஆண்டில்தான் அதிகளவிலான மாணவ-மாணவிகள் (646 பேர்) முழு மதிப்பெண் பெற்றனர்.
2008-ல் 282 பேரும், 2009-ல் 245 பேரும், 2010-ல் 231 பேரும் "சென்டம்' பெற்றிருந்தனர். இந் நிலையில் வினாத்தாள் கடினமாக இருந்ததால் இந்த ஆண்டில் முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை குறையக் கூடும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கருதுகின்றனர். இயற்பியல் பாடத்தில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.