முகப்பு
தமிழ்நாடு

மின் தட்டுப்பாடு எதிரொலி: ஆட்டுக்கல் விற்பனை மும்முரம்

திருவள்ளூர், மார்ச் 29: மின்தட்டுப்பாடு காரணமாக பாரம்பரிய வீட்டு உபயோக சாதனங்களான ஆட்டுக் கல், அம்மிக்கல் ஆகியவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன.  கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றின் வருகைக்கு முன்பு ப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:31 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:12 PM

திருவள்ளூர், மார்ச் 29: மின்தட்டுப்பாடு காரணமாக பாரம்பரிய வீட்டு உபயோக சாதனங்களான ஆட்டுக் கல், அம்மிக்கல் ஆகியவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன.

 கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றின் வருகைக்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அம்மிக்கல், ஆட்டுக்கல் கொண்டு தான் மாவு அரைப்பது, சட்னி அரைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

 இதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும், உடல்நலனுக்கு உகந்ததாகவும், பெண்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் இருந்தது. தற்போது அனைத்து வீடுகளிலும் கிரைண்டர், மிக்ஸி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பெண்களுக்கு நேரம் மிச்சமானது. இதன் எதிரொலியாக வீடுகளில் ஆட்டுக்கல், அம்மிக்கல் பயன்பாடு மிகவும் குறைந்தது. தற்போது மின்வெட்டு கடுமையாக உள்ளது. நாள்தோறும் குறைந்தது 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

Advertisement

 அதிகாலை 6 மணிக்கே மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு அடைகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

 வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை குறித்த நேரத்திலும் இயக்க முடிவதில்லை.

 இதனால் பொதுமக்கள் கவனம் தற்போது மீண்டும் ஆட்டுக்கல், அம்மிக்கல் பக்கம் திரும்பி உள்ளது. திருவள்ளூர் நகரில் இவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இது குறித்து ஜே.என்.சாலையில் ஆட்டுக்கல், அம்மிக்கல்லை தயாரித்து வரும் சீனிவாசன் கூறியது:

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவற்றை வாங்க ஆளில்லாத நிலை இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 விற்பனை ஆகிறது. அம்மிக்கல், ஆட்டுக்கல் செய்வதற்கு தேவையான கற்களை காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து ஒரு லோடு கல் ரூ.25 ஆயிரம் என வாங்கி வருகிறோம்.

 நாள் ஒன்றுக்கு 4 ஆட்டுக்கல், அம்மிக் கற்களை செய்யமுடியும். ரூ.600 முதல் 700 வரை இவை விற்பனை செய்யப்படுகிறது. மின்வெட்டால் தற்போது பாரம்பரியமான சாதனங்கள் மீண்டும் விற்கப்பட்டு வருகிறது என்றார்.

 ஆட்டுக்கல் வாங்குவதற்காக வந்த சாவித்திரி கூறுகையில், மின்வெட்டு எப்போது தீரும் எனத் தெரியவில்லை. ஆட்டுக்கல், அம்மிக்கல் இருந்தால் எப்போது வேண்டும் ஆனாலும் அரைத்துக் கொள்ளலாம். இதனால் தான் ஆட்டுக்கல்லை வாங்குவதற்காக வந்துள்ளேன் என்றார்.

 கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களிலேயே மாயமான நிலையில் இருந்த அம்மிக்கல், ஆட்டுக்கல்லுக்கு தற்போது நகர்புறங்களிலும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.