தமிழ்நாடு

கோவையில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி 60% வீழ்ச்சி

கோவை: தொழில் நகரமான கோவையில் மின்வெட்டு காரணமாக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உற்பத்திச் செலவும் 70 சதவீதம் வரை கூடியுள்ளதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான நி

ஆர். ஆதித்தன்

கோவை: தொழில் நகரமான கோவையில் மின்வெட்டு காரணமாக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உற்பத்திச் செலவும் 70 சதவீதம் வரை கூடியுள்ளதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் நஷ்டத்தில் தத்தளிக்கின்றன.

 தமிழகம் முழுவதும் மின்வெட்டு 6 மணி முதல் 8 மணி நேரம் வரை அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் நிறைந்த கோவையில் உற்பத்தித் திறன் வெகுவாகக் குறைந்துவிட்டது.

 ஒருபுறம் தொழிற்சாலைகள் ஆள் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றன. மறுபுறம் தொழில் நிறுவனங்கள் பெருமளவில் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 வீட்டு உபயோகப் பொருள்கள் தொடங்கி பல்வேறு உபயோகங்களுக்கான பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி கோவையில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. இதனால் உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மின்வெட்டுக்கு முன்னர் 1,700 டன்னாக இருந்த பிளாஸ்டிக் மூலப்பொருள் பயன்பாடு தற்போது 700 டன்னாகக் குறைந்துவிட்டது.

 உற்பத்திச் செலவும் 70 சதவீதம் வரை அதிகரித்து விட்டதால் பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபடுவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளூர்ச் சந்தையை வெளிமாநில நிறுவனங்கள் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான குடம், பக்கெட், டிரம்கள், கப்கள், பைகள் ஆகியவற்றின் விலையும் ரூ. 20 முதல் ரூ. 30 வரை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஆர்டர் கொடுக்கும் வர்த்தக நிறுவனங்கள் இரண்டு வாரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து கோவை மாவட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் அண்ணாமலை கூறியது:

 கடந்த டிசம்பரில் தொடங்கிய மின்வெட்டுப் பிரச்னையால் பிளாஸ்டிக் தொழில் உற்பத்தி கோவையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வைத்துள்ள நிறுவனங்கள் உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களை ஓரளவு உற்பத்தி செய்து வருகின்றன. எனினும் ஆள் பற்றாக்குறையும், மின்வெட்டுப் பிரச்னையும் இத்தொழிலுக்கு பெரும் சவாலாக உள்ளன என்றார்.

 

 உற்பத்தி சரிவால் நுகர்வில் தேக்கம்

 பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி வீழ்ச்சியால் அவற்றின் நுகர்விலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோவை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் வி.கே.பாபு கூறியது:

 பிளாஸ்டிக் பொருள்களை கோவையிலிருந்து வெளியூர்களுக்கு அனுப்பி வந்த நிலை மாறிவிட்டது. இப்போது, பிளாஸ்டிக் பொருள்களை வெளி மாநிலங்களில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ஆந்திரம், புதுச்சேரி, கோவா ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி வரப்படுகின்றன. தவிர சவுதி அரேபியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

 பிளாஸ்டிக் மூலப்பொருள் வழங்குவதில் ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கெயில் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு டன் பிளாஸ்டிக் மூலப்பொருளை ரூ. 1.10 லட்சம் வரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் பொருள்களின் நுகர்வு ஒவ்வோர் ஆண்டும் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்து வரும். இந்த ஆண்டு உற்பத்தி சரிந்துள்ளதால், தேவையை நிறைவேற்ற முடியாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT