முகப்பு
தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பாததால் பணிகள் தேக்கம்

ஸ்ரீபெரும்புதூர், மே 5: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகள் நடைபெறுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பு

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர், மே 5: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகள் நடைபெறுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், புனிததோமையர்மலை, வாலாஜாபாத், உத்தரமேரூர், திருப்போரூர், திருக்கழுகுன்றம், காட்டாங்குளத்தூர், மதுராந்தகம், லத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் ஆகிய 13 ஒன்றியங்களில் 648 ஊராட்சிகள் உள்ளன.

ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி திட்டங்களுக்கு தனி தனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர். இவர்களின்கீழ் நிர்வாகம், திட்டம், சத்துணவு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், ஊராட்சிகள், மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் நலம், தணிக்கை உள்ளிட்ட 9 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் 10 அலுவலக பணி உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள், 2 தட்டச்சர், ஒரு காசாளர், இரண்டு பொறியாளர்களில் இருந்து நான்கு பொறியாளர்கள் மற்றும் ஆறு பணி மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு ஊராட்சிகளுக்கு ஒரு ஊர்நல அலுவலர் வீதம் ஊராட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான ஊர்நல அலுவலர்கள் பணியிடம் உள்ளது.

ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பெரும்பாலான ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஊர்நல அலுவலர்களின் பணி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடைபெறும் பணிகள், புதிய திட்டங்கள், பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள் குறித்த விவரங்களை சேகரித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்போது ஒன்றியத்துக்கு இரண்டு ஊர்நல அலுவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யமுடியாமலும், பணிகளைப் பார்வையிட முடியாமலும் குறைந்த நபர்களே பணியாற்றிவருவதால் ஓரிரு மாதங்களில் நடைபெற வேண்டிய பணிகள் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித் துறை பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே காலியாக உள்ளன. இதுகுறித்து ஒவ்வொரு கூட்டத்தின்போதும் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றார்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சசிகுமார் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 160 உதவியாளர் பணியிடங்களும், ஊர்நல அலுவலர்கள் 90 பணியிடங்களும் நிரப்பப்படாமலேயே உள்ளன. மேலும் ஆவணக் காப்பாளர்கள் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுமட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நான்கு அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இப்பிரச்னை உள்ளது. எனவே அரசு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டும் என்றால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.

அரசின் பல திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுவதுமாக சென்றடைய வேண்டும் என்றால் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →