முகப்பு
தமிழ்நாடு

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்

சென்னை, மே 12: தமிழ் வழியில் படித்தோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான கோப்புகள் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையில் தேங்கியிருப்பதால், குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் இதுவ

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:39 PM
பகிர்:

சென்னை, மே 12: தமிழ் வழியில் படித்தோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான கோப்புகள் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையில் தேங்கியிருப்பதால், குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 இந்தத் தேர்வுகள் நடைபெற்ற அதேகால கட்டத்தில் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருவதாக தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

 இந்த வெளிப்படைத் தன்மைக்கு சிறந்த சான்றாக, எந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும், முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது.

 அதன்படி, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்வு, குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரலிலேயே வெளியாகும் என தேர்வாணையத்தின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

 தமிழகத்தில் குரூப் 1-ன் கீழ் வரும் 131 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 5-ம் தேதியும், 6,695 குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 11-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர்.

 தேர்வு முடிவுகள் தாமதம் ஏன்? விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தும் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடித்துள்ளது. ஆனால், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு எழுதியவர்களில் தமிழ் வழியில் பயின்றோரில் 20 சதவீதம் பேரை ரோஸ்டர் முறையின் கீழ் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கோப்புகள் அந்தத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பட்டியல்படி நடக்குமா? அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு கால அட்டவணையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூன் 9, 10-ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்வு முடிவுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் இடையிலான கால அளவு ஒரு மாதம் கூட இல்லை. தேர்வு கால அட்டவணைப்படி தேர்வை நடத்தினால் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று பிரதானத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே, குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்ற கோரிக்கையை தேர்வர்கள் முன்வைக்கின்றனர்.

 கிராம நிர்வாக அலுவலர்களும் காத்திருப்பு: கிராம நிர்வாக அலுவலர்களில் (வி.ஏ.ஓ.) தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும் குரூப் 2 தேர்வினை எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ.க்கான பணியிட உத்தரவுகளை அவர்கள் பெற்றாலும் பெரும்பாலானோர் விடுப்பில் சென்றுள்ளனர். அவர்கள் குரூப் 2 தேர்வின் முடிவைப் பார்த்த பிறகு பணியில் சேர்வதற்கான திட்டத்தில் உள்ளனர்.

 எனவே, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படுமா என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.