முகப்பு
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு: இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பம்: பயிற்சி வகுப்புகளைக் கண்காணிக்க உத்தரவு

சென்னை, மே 21: தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால், அங்கு மாவட்ட நி

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:40 PM
பகிர்:

சென்னை, மே 21: தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால், அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர்,

 நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4-ன் கீழ் வருகின்றன. சில ஆண்டுகளாக இந்தப் பிரிவில் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 இடங்களுக்குத் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

 தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

 மே 28 கடைசி நாள்: தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 28-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 7-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆன்-லைன் மூலமாக சராசரியாக நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி 7.18 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில், ஆண்கள் 3.85 லட்சம் பேர். பெண்கள் 3.33 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை மாலையில் 8 லட்சத்தைத் தாண்டியது. குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில் தேர்வுக்கு விண்ணப்பித்தாலே போதும்; நிரந்தரப் பதிவு அவசியம் இல்லை என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளதால் ஒவ்வொரு நாளும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 தென் மாவட்டங்கள் அதிகம்: குரூப் 4 தேர்வுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடம் வகிக்கின்றனர். மொத்த விண்ணப்பதாரர்களில் 40 சதவீதம் பேர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 அதிலும், குறிப்பாக திருநெல்வேலி, மதுரை மாவட்ட தேர்வர்கள் அதிக ஆர்வத்துடன் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். சென்னை, வேலூர், விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களில் இருந்து 25 சதவீதம் பேரும், மேற்கு மாவட்டங்களில் இருந்து 20 சதவீதமும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து 15 சதவீதம் பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

 பின்தங்கிய மாவட்டங்கள்: தேர்வுக்கு விண்ணப்பிப்போரில் ஆர்வம் குறைந்த மாவட்டங்களாக அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகியன கண்டறியப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் இந்த மாவட்டங்களிலிருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கிறது என அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 இந்த மாவட்டங்களில் தேர்வர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 பயிற்சி வகுப்புகள் மீது கண்காணிப்பு: தங்களிடம் படித்தால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என பல பயிற்சி வகுப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இதனை நம்பி விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆர்வத்துடன் பயிற்சி வகுப்புகளில் பல ஆயிரம் ரூபாய் பணம் கட்டி படித்து வருகின்றனர்.

 எந்த அடிப்படையில் அவை அதுபோன்ற உறுதியை அளிக்கின்றன என்ற கேள்வியை அரசு அதிகாரிகள் எழுப்புகிறார்கள். அத்தகைய பயிற்சி வகுப்புகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 கடைசி நேர அவசரம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரமே எஞ்சியுள்ளதால் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.