குண்டும் குழியுமாக மாறிய கிராம சாலை
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர்-ராஜபாளையம் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால்
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர்-ராஜபாளையம் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
பூண்டி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர், ராஜபாளையம், மேலானூர், மொண்ணவேடு, சித்தம்பாக்கம், எறையூர், சீயஞ்சேரி, பீமன்தோப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாணவ, மாணவியர், திருவள்ளூர் சென்று வருகின்றனர். 10 கி.மீ. தூரமுள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மரணக்குழிகள் போல் 3 அடி ஆழம் நிறைந்த பள்ளங்கள் இச்சாலையில் காணப்படுகின்றன. இச்சாலை சீரமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகின்றன. பலமுறை பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் சாலையை சீரமைக்குமாறு கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை ராஜபாளையம் ஏரி மற்றும் குசஸ்தலை ஆற்றில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மணல் லாரிகள் மூலம் மணல் எடுத்துச்செல்லப்பட்டது. அதனால் ஏற்கெனவே பழுதடைந்து கிடந்த இச்சாலை மேலும் சிதிலமடைந்து விட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் 5-ம், ஏராளமான ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.
மேலும் நாள்தோறும் வாகனங்கள் மூலம் காய்கறி உள்ளிட்டவை திருவள்ளூருக்கும், சென்னைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இதுகுறித்து ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் கூறியது:
ராஜபாளையம்-மெய்யூர் சாலை மார்க்கமாகத்தான் திருவள்ளூருக்கு நாங்கள் சென்று வருகிறோம். இச்சாலையைச் சீரமைக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனில்லை. மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதிக்கு ஒருமுறை நேரில் வந்து பார்வையிட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.