முகப்பு
தமிழ்நாடு

கொடுவா மீன் வளர்ப்புஇருளர் இன பெண்களுக்கு வாழ்வாதாரம்!

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில்

Updated On : 13 அக்டோபர், 2012 at 1:06 AM
பகிர்:

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் பழவேற்காட்டில் வசிக்கும் இருளர் இன பெண்களுக்கு 10 ஆயிரம் கொடுவா மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

 அந்த மீன்கள் 1 கிலோ அளவு வளரும் வரை அவற்றை வளர்ப்பதற்கான முறைகள் குறித்தும் அந்த ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் அப்பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குளத்துமேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

Advertisement

 அவர்கள் அங்குள்ள ஏரிப்பகுதியில் மீன், இறால், நண்டு ஆகியவற்றை பிடித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் இருளர் இன பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.

 இதில், தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அலங்கார மீன் மற்றும் காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல், பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் வசிக்கும் இருளர் இன பெண்களுக்கு நாற்றங்காலில் கொடுவா மீன் குஞ்சுகளை விட்டு அதனை வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 இதையடுத்து, கொடுவா மீன் குஞ்சுகள் அங்குள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ள வலையில் (நாற்றங்காலில்) விடப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் 10 ஆயிரம் கொடுவா மீன் குஞ்சுகளை இருளர் இனப் பெண்களிடம் வழங்கினர். இதையடுத்து கொடுவா மீன் குஞ்சுகளுக்கு மீன் தீவனம் அளிப்பது மற்றும் அவை 1 கிலோ எடை வளரும் வரை அதைப் பாதுகாப்பாக வளர்ப்பது குறித்து அவர்களுக்கு பயிற்சியளித்தனர்.

 கடல் மற்றும் ஏரி நீரில் இருக்கும் கொடுவா இனத்தின் மீன் குஞ்சுகளை வலையில் (நாற்றங்காலில்) வைத்து வளர்ப்பது தமிழத்தில் பழவேற்காடு பகுதியில்தான் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 இதில் கிடைக்கும் பயனை பொறுத்து, இந்த முறையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை ஏற்படும் எனவும் அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.