மன வலிமை இல்லாத மாணவர்கள்
திருத்தணி, செப். 4: பல்வேறு காரணங்களால் பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. பள்ளி பருவத்திலேயே, மாணவர்கள் சிறு தோல்விகளை கூட தாங்க முடியாத அளவுக்கு, உயிரின் உச்ச கட்டத்துக்குச் சென
திருத்தணி, செப். 4: பல்வேறு காரணங்களால் பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. பள்ளி பருவத்திலேயே, மாணவர்கள் சிறு தோல்விகளை கூட தாங்க முடியாத அளவுக்கு, உயிரின் உச்ச கட்டத்துக்குச் சென்று உயிர் துறக்கும் பரிதாப முடிவை சமீப காலமாகவே எடுத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன. இதில் குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி ஆகிய காரணங்களுக்காக திருத்தணியில் மட்டும் ஆண்டுக்கு 5 முதல் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
இந்த தற்கொலைகள் நடக்க காரணம் சமூகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளா?, குடும்ப உறவுகளில் உள்ள விரிசல்களா?, அல்லது மனரீதியான பிரச்னைகளா? பல காரணங்களால் தற்கொலை எண்ணம் மேலோங்கி வருகிறதா? எனத் தெரியாமல் பலர் இந்த முடிவுகளுக்கு செல்கின்றனர்.
இதில் 14 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்தான், அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து திருத்தணி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கூறும்போது: எதிர்பாராத மனமாற்றம் தற்கொலையில் முடிந்தால், இழந்த உயிரை, எந்த விலைக் கொடுத்தாலும் மீட்கவே முடியாது. தற்கொலையால் பாதிக்கப்படுபவர்கள், அவர்களின் குடும்பத்தினர்தான். அந்த இழப்பின் ரணம், எஞ்சிய வாழ்க்கை முழுவதும், உற்றாருக்கு வலியை தந்து கொண்டே இருக்கும்.
சமூகத்தில் பிரச்னைகளை, தன்னால் எதிர்கொள்ள முடியாது என்ற, தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்கள், தன்னம்பிக்கையற்றவர்கள் கோழைகள்தான், சொந்த உயிருக்கே உலை வைக்கும் தற்கொலை என்ற, விபரீத முடிவுக்கு வருவர் எண்ணிக்கையோ அதிகம்.
தற்போதைய சூழலில், தற்கொலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுபவர்களும் உண்டு. அபரிமிதமான எதிர்பார்ப்புகளை மற்றவர்கள் மீது, அவர்களின் தாங்கும் திறனுக்கு அதிகமாக திணிக்கும் போது, தற்கொலைதான் தீர்வு என்ற, முடிவுக்கு செல்கின்றனர் மாணவர்கள். எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தின் முதல்படி என்பதை உணர்ந்தவர்கள் குறைவு என்றார் அவர்.
இது குறித்து கவிஞர் மா.சொ.சொக்கலிங்கம் கூறும்போது: தற்கொலைகள் அதிகரிக்க காரணம்தான் என்ன? இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு எத்தகையப் பயிற்சிகளை தர வேண்டும்?. உயர்நிலை, மேல்நிலை கல்வியில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். தொழில்நுட்பக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். நேர்காணலில், தேர்வாகி வேலைக்குச் செல்ல வேண்டும். வெளிநாடு சென்று அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பன போன்ற, எதிர்பார்ப்பை மாணவர்கள் மீது பெற்றோர் திணிக்கும்போது, அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.
தேர்வு குறித்த பயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, புதிய சமுதாயத்தில் எளிதாக பழக முடியாத நிலை போன்ற, பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தின் உச்சம் தற்கொலையில் முடிகிறது.
இன்டர்நெட், டிவி, சினிமா உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறைவு, பெற்றோரின் அன்பும், ஆதரவும் குறைவு, மனதாலும், உடலாலும் தனிமைப்படுத்தப்படுதல், அதிகமான வேலைப்பளு, அதிக எண்ணிக்கையில் நடக்கும் தேர்வுகள், பொறுமையின்மை, தன்னம்பிக்கை இல்லாமை, பெற்றோர் - குழந்தைகள் இடையே நெருக்கமில்லாத உறவு நிலை, ஆசிரியர் - மாணவர் அணுகுமுறை என, பல காரணங்கள், பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்து, தற்கொலைக்கு தூண்டப்படுகின்றன என்றார்.
இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மாணவர்களுக்கு புத்தகக் கல்வியை புகட்டும் பாட திட்டங்கள், அவர்களின் மனப்பூர்வமான பிரச்னைகளையும் ஆராயத் தொடங்கினால், எதிர்காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கையை சிறிதேனும் குறைக்க முடியும் என்பதே சமூகஆர்வலர்களின் கருத்து.