சி.டி. ஸ்கேன் கருவி பழுது: அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கு
திருவள்ளூர், செப். 18: திருவள்ளூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி கடந்த ஓராண்டாக செயல்படாததால், ஏழை நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த
திருவள்ளூர், செப். 18: திருவள்ளூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி கடந்த ஓராண்டாக செயல்படாததால், ஏழை நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த 1997-ம் ஆண்டு திருவள்ளூரை மாவட்டத் தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது திருவள்ளூரில் இருந்த அரசு மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் குழந்தைகள் நலம், மகப்பேறு பிரிவு, பொது சிகிச்சை பிரிவு, முடநீக்கியல் பிரிவு, இதய சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை உள்ளன.
திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி, திருத்தணி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்நத ஏழை நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காப்பீடு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள சிடி ஸ்கேன் கருவிகளும், சென்னை, திருச்சி, மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அதி நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளும் வழங்கப்பட்டன.
தனியார் சி.டி. ஸ்கேன் மையங்களில் ஸ்கேன் எடுக்க குறைந்தபட்சம் ரூ.1500 முதல் ரூ.10000 வரை வாங்கப்படுகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளில் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரைதான் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும் சிடி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டது. இதை இயக்க தொழில்நுட்பப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஓராண்டாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் கருவி இயங்காமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். ஸ்கேன் எடுக்கவேண்டிய நோயாளிகள் திருவள்ளூரில் உள்ள தனியார் சிடி ஸ்கேன் மையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: சிடி ஸ்கேன் கருவி பழுது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதான கருவிக்கு பதிலாக புதிய சிடி ஸ்கேன் கருவிதான் வரவேண்டும். விரைவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு புதிய ஸ்கேன் கருவி தருவிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் நோயாளிகளும், பொதுமக்களும் இதற்காக எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு அரசுதான் பதில் கூறவேண்டும்.
திருவள்ளூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் கருவி மையம்.