முகப்பு
தமிழ்நாடு

துணை மின் நிலையங்கள் அமைக்க முடியாமல் திணறும் மின் வாரியம்

சென்னை: மின் வாரியம் அனுமதி அளித்தும் நிலம் கிடைக்காததால் கூடுதல் துணை மின் நிலையங்களை அமைக்க முடியாமல் திணறி வருவதாக பல்வேறு பகுதி மின் பொறியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை உள்பட தமிழகம் முழு

Updated On : 26 செப்டம்பர், 2012 at 12:01 PM
பகிர்:

சென்னை: மின் வாரியம் அனுமதி அளித்தும் நிலம் கிடைக்காததால் கூடுதல் துணை மின் நிலையங்களை அமைக்க முடியாமல் திணறி வருவதாக பல்வேறு பகுதி மின் பொறியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக குறைவழுத்த மின் பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. இதனால் மின் சாதனங்கள் பழுது, இரவில் மின் தடை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நுகர்வோர் சந்தித்து வருகின்றனர்.

துணை மின் நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாததும், நுகர்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கேற்ப துணை மின் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யாததுமே காரணம் என்கின்றனர் மின் வாரிய பொறியாளர்கள்.

Advertisement

அதாவது, மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 230 கே.வி.யாகக் (கிலோ வோல்ட்) கிடைக்கும் மின்சாரத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. அந்த மின்சாரத்தை படிப்படியாக குறைத்துதான் (ஸ்டெப் டவுன்) பயன்படுத்த முடியும்.

230 கே.வி.யாக கிடைக்கும் மின்சாரம், 110 கே.வி.யாகக் குறைக்கப்பட்டு துணை மின் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும். பின்னர் 66 கே.வி.யாகவும், 33 கே.வி.யாகவும் இறுதியாக 11 கே.வி.யாகக் குறைக்கப்பட்டு டிரான்ஸ்ஃபார்களுக்குக் கொண்டுவரப்படும்.

இந்த டிரான்ஸ்ஃபார்மர்களிலிருந்து உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கு 440 வோல்ட்டாகவும், வீடுகளுக்கு 230 வோல்ட்டாகவும் குறைப்பு செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு மின்சாரத்தை ஸ்டெப்-அப் மற்றும் ஸ்டெப் டவுன் செய்து கொடுத்து ஏற்ற இறக்கம் அற்ற சீரான மின்சாரம் வழங்குவதில் துணை மின் நிலையங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இப்போது ஒரு சில பகுதிகளில் கூடுதல் துணை மின் நிலையங்களை அமைக்க மின் வாரியம் முயற்சிகளை எடுத்தபோதும், அதற்கு தேவையான நிலம் கிடைக்கவில்லை.

திருத்தியமைக்கப்பட்ட உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ், சென்னை மின் பகிர்மான வட்டத்தில் கூடுதல் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மின் வாரியம் மேற்கொண்டு வருகிறது.அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதற்கான அனுமதியளித்து, கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்ணா நகர் வட்டத்தில் அமைந்தகரை சிக்னல் உள்பட 5 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு ஆண்டுகளில் இப்பணிகள் முடிந்துவிடும். அதன் பிறகு இப்பகுதியில் குறைவழுத்த மின் பிரச்னை இருக்காது என்கிறார் அப்பகுதி மின் வாரிய பொறியாளர்.

இதுபோல் தண்டையார்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலும் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்பகுதிகளில் தேவையான நிலம் கிடைக்காததால் துணை மின் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை வட்டத்தில் எர்ணாவூர், மணலி, மீஞ்சூர் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய துணை மின் நிலைங்கள் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நிலம் ஒதுக்கப்படவில்லை. இதனால், பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அப்பகுதி மின் வாரிய பொறியாளர்கள்.

பெரம்பூர் வட்டத்தில் கொளத்தூர் பெரியார் நகர், செம்பியம் காந்திநகர், அயனாவரம் பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், துணை மின் நிலையங்கள் அமைக்கம் பணி தொடர்ந்து தாமதமாகி வருகின்றன என்கின்றனர் பொறியாளர்கள்.

அளவுக்கு அதிகமான நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்வதால், அடிக்கடி டிரான்ஸ்ஃபார்மர்களில் பழுது, கேபிள்கள் பழுது ஏற்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் தினமும் 2 மணி நேரங்களுக்கு மேல் மின் தடை செய்யும் நிலை உள்ளது என்கின்றனர் பொறியாளர்கள்.

எனவே, தமிழக அரசு தலையிட்டு, விரைவில் நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொறியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சென்னையில் மட்டுமின்றி பொன்னேரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைக்க அப்பகுதி பொறியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

முழுமையான அளவில் அவை அமைக்கப்படும் போது, மின் ஏற்ற இறக்கப் பிரச்னையே தமிழகத்தில் இருக்காது என்கின்றனர் பொறியாளர்கள்.

நிதி ஒதுக்கியும் நிலம் இல்லை

தண்டையார்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலும் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி

அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதிகளில் தேவையான நிலம் கிடைக்காததால் துணை மின் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்

ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.