அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்
சென்னை, செப். 20: மின் கட்டமைப்பு அதிர்வெண் இயக்க அளவை உயர்த்தியதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்
சென்னை, செப். 20: மின் கட்டமைப்பு அதிர்வெண் இயக்க அளவை உயர்த்தியதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரத்தை மாற்றி அமைப்பதற்கான பரிந்துரையை மின் வாரியம் ஒரு வாரத்துக்கு முன்பே தமிழக அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், சென்னையில் நடைமுறையில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டு மீண்டும் இரண்டு மணி நேரமாகவும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமாக உள்ளது மீண்டும் 4 மணி நேரமாகவும் உயர்த்தப்படலாம் என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
வட மாநிலங்களில் கடந்த ஜூலை 30, 31-ம் தேதிகளில் ஏற்பட்ட மின் கட்டமைப்பு பாதிப்பைத் தொடர்ந்து, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டமைப்பின் குறைந்தபட்ச அதிர்வெண் இயக்க அளவை (ஃப்ரீக்வென்ஸி) 49.50 ஹெர்ட்ஸ் அளவிலிருந்து 49.70 ஹெர்ட்ஸôக உயர்த்தியது. மேலும் இந்த புதிய நடைமுறை 2-4-2012 முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்தது.
மின் உற்பத்தி குறைவாக உள்ள தமிழகம் இதனால் பாதிக்கும் என்பதால், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவையும் பெற்றது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஜூலை 19-ஆம் தேதி தொடங்கியது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதன் காரணமாக, அதிர்வெண் தொடர்பான மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறையை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
தமிழகத்தின் மின் தேவை ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2001-02-ல் 6,687 மெகா வாட்டாக இருந்த மாநிலத்தின் மின் தேவை 2002-03-ல் 6,957 மெகா வாட்டாகவும், 2003-04-ல் 7,228 மெகா வாட்டாகவும் உயர்ந்து 2005-06-ம் ஆண்டில் 8,209 மெகா வாட் என்ற அளவுக்கு உயர்ந்தது.
அதன் பிறகும் தொடர்ந்து உயர்ந்து வந்த மின் தேவை 2006-07-ல் 8,803 மெகா வாட் என்ற அளவிலும், 2008-09-ல் 10,909 மெகா வாட் என்ற அளவிலும் படிப்படியாக உயர்ந்து 2010-11-ம் ஆண்டில் 11,780 மெகா வாட் அளவுக்கு உயர்ந்தது. அதாவது 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 4,300 மெகா வாட் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஆனால், அந்த 10 ஆண்டுகளில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான எந்தவித புதிய திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.
தனித்துவிடப்பட்ட தென் மாநிலங்கள்: இதுமட்டுமின்றி தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 5 மாநிலங்களும் மத்திய மின் தொகுப்பு கட்டமைப்புடன் முழுமையாக இணைக்கப்படாமல் தனித்து விடப்பட்டுள்ளன.
ஒரு சில நேரடி மின்சார (டிசி) கட்டமைப்புகள் மட்டுமே மத்திய தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் மாற்று மின்சாரம் (ஏசி) உள்ளிட்ட பிற கட்டமைப்புகள் எதுவும் இன்னும் இணைக்கப்படவில்லை. 2015-ம் ஆண்டில்தான் இவை முழுவதும் மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் தமிழகம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களும் மின் கட்டமைப்பின் திறனை அதிகரிக்க முடியாமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில்தான் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டமைப்பின் அதிர்வெண்ணை உயர்த்தியது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி குறைவாக இருக்கும்போது, மின் கட்டமைப்பின் அதிர்வெண் அளவை உயர்த்த வேண்டுமானால் மின்வெட்டு அளவை அதிகரித்தால் மட்டுமே முடியும்.
அதிக ஏற்ற இறக்கத்துடன் காற்றாலை மின் உற்பத்தி: காற்றாலை மின் உற்பத்தியும் கடந்த சில தினங்களாக அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செப்டம்பர் 16-ஆம் தேதி 2,402 மெகா வாட் அளவில் இருந்த காற்றாலை மின் உற்பத்தி செப்டம்பர் 17-ம் தேதி 2,635 மெகா வாட்டாகவும், 18-ம் தேதி 2,240 மெகா வாட் அளவிலும் இருந்தது.
இது புதன்கிழமை (செப்டம்பர் 19) 1,180 மெகா வாட்டாக குறைந்தது. அதுவும் குறைந்தபட்சம் 133 மெகா வாட் என்ற அளவிலும் அதிகபட்சம் 1,180 மெகா வாட் என்ற அளவிலும் இருந்தது.
இனி படிப்படியாக காற்றாலை மின் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே கிராமப்புறங்களிலும், பிற மாவட்டங்களிலும் புதன்கிழமை மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனவே, புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாடு நிலையை ஒரு சில மாதங்கள் அதிகரித்தால் மட்டுமே, அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லாமல் இருக்கும் என்றார் அவர்.