தமிழ்நாடு

மின்வெட்டு: மூடப்படும் அபாயத்தில் சிறுதொழில் கூடங்கள்!

மதுரை: மதுரை மாவட்டத்தில் கப்பலூர், கே.புதூர், உறங்கான்பட்டி ஆகிய இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிளாஸ்டிக், ரப்பர், என்ஜினீயரிங், ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள்

சிவ. மணிகண்டன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கப்பலூர், கே.புதூர், உறங்கான்பட்டி ஆகிய இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிளாஸ்டிக், ரப்பர், என்ஜினீயரிங், ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உள்ளிட்டவை சார்ந்த சிறுதொழில் கூடங்கள் உள்ளன.

 மூடப்படும் சிறுதொழில் கூடங்கள்:

 கப்பலூர் தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக், ரப்பர் சார்ந்த தொழில் கூடங்கள் ஏராளமாக இருக்கின்றன. மின்வெட்டு காரணமாக உற்பத்தி தொடர்பாக எந்தவிதத் திட்டமிடலையும் தொழில்முனைவோர் மேற்கொள்ள இயலவில்லை என்கிறார் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.ஆர்.ராஜேந்திரன்.

 30 சிறுதொழில் கூடங்கள் மூடல்:

 தொடர் மின்வெட்டு காரணமாக கப்பலூர் தொழிற்பேட்டையில் மட்டும் ஏறத்தாழ 30 சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மின் வாரியத்திடம் இருந்து யூனிட் ரூ.6-க்கு மின்சாரம் பெறுகிறோம். ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் மின்சாரத்துக்கான செலவு ரூ.16 ஆக உயர்ந்துவிட்டது. 60 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், ஆனால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விலைக்கே ஆர்டர்களை கொடுக்க வேண்டும் என்பதால், நஷ்டத்தில் தொழில்கூடங்களை இயக்கி வருகிறோம். இதேநிலை நீடித்தால் அனைத்து சிறுதொழில் கூடங்களையும் மூடுவதைத் தவிர வழியில்லை. மின் விநியோகத்தில் சென்னைக்கும், பிற பகுதிகளுக்கும் பாகுபாடு காட்டக் கூடாது.

 கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுதொழில் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இதுதொடர்பாக எங்களது சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 26) நடைபெறுகிறது. இதில் எடுக்கும் முடிவின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார் ராஜேந்திரன்.

 உள்நாட்டு உற்பத்திக்கு முடக்கம்:

 சிறுதொழில் கூடங்களுக்குப் போதுமான மின் விநியோகம் இல்லாததால், உள்நாட்டு உற்பத்தி முடக்கப்படுகிறது என்று கே.புதூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கச் செயலர் சம்பத் கூறினார். அவர் மேலும் கூறியது: பெரிய தொழில்கூடங்கள் ஜெனரேட்டரை சொந்தமாக வைத்து இயக்க முடியும். சிறுதொழில் கூடங்களில் அத்தகைய நிலை கிடையாது. ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஆர்டர்களை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால், சிறுதொழில் கூடங்கள் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகின்றன. இதனால் உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், 50 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 பெரிய நிறுவனங்களின் ஜெனரேட்டர்களில் இருந்து மின் உற்பத்தி செய்தால் ஏறத்தாழ 4 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தி செய்ய இயலும். பற்றாக்குறையைச் சமாளிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து சென்னைக்கு, பிற மாவட்டங்களுக்கும் மின் விநியோகத்தில் பாகுபாடு காட்டக் கூடாது என்றார்.

 நீதிமன்றத்தை நாட முடிவு:

 மதுரையை அடுத்த உறங்கான்பட்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறுதொழில் கூடங்களில் 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. "பிளாஸ்டிக், ரப்பர், மருந்து, உணவு பதனிடல், ஆயத்த ஆடை உள்ளிட்ட 12 வகைத் தொழில்கள் சார்ந்த சிறுதொழில் கூடங்கள் உள்ளன. நாளொன்றுக்கு 3 மணி நேரம் என அறிவித்து மின்தடை ஏற்பட்ட காலம் மாறி, நினைத்த நேரத்துக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் கட்டணத்தை உயர்த்திய நிலையில், மின் விநியோகம் சீராக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதோடு, சென்னைக்கும், மாவட்டங்களுக்கும் என விநியோகத்தில் பாகுபாடு இருப்பது ஏற்புடைதல்ல. இதை எதிர்த்து பல்வேறு தொழில் அமைப்புகள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளன' என்கிறார் உறங்கான்படி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.கே.பி. நவாஸ்பாபு.

 

 பிளாஸ்டிக் ஆலைகளில்  ஒரு ஷிப்ட் குறைப்பு

 துரையில் சிறியதும், பெரியதுமாக 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்று ஷிப்டுகள் இயங்கிவந்த இந்த ஆலைகள் தற்போது ஒரு ஷிப்டை குறைத்துவிட்டன.

 "பிளாஸ்டிக் ஆலையைப் பொருத்தவரை உற்பத்தி துவங்குவதற்கு முன்பு இயந்திரங்களைத் தயார்ப்படுத்த ஏறத்தாழ ஒரு மணிநேரம் ஆகும். இந்த நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால், மீண்டும் இயந்திரத்தைத் தயார்படுத்துவதில் இடையூறு ஏற்படும்.

 முழுவதும் மின்சாரத்தை நம்பியே உற்பத்தி இருப்பதால், பிளாஸ்டிக் பொருள் உற்பத்திக் கூடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கிலோவுக்கு ரூ.5.50 ஆக இருந்த உற்பத்திச் செலவு, தற்போது ரூ.9.75-லிருந்து ரூ.11 வரை உயர்ந்திருக்கிறது. இப்போதைய சூழலில் ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆலைகளால் இயங்க முடியாது. இதனால் ஒரு ஷிப்ட்-ஐக் குறைத்துவிட்டோம்' என்கிறார் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி ஆலையை நடத்தும் மாரிமுத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT