முகப்பு
தமிழ்நாடு

5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் ஊர்க்காவல் படையினர்

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல்

Updated On : 12 பிப்ரவரி, 2013 at 2:01 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதனால் கூடுதல் ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு இளைஞர் காவல் படைக்கான தேர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2,500 பெண்கள் உட்பட 16,600 பேர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது 45 பெண்கள் உட்பட 490 பேர் ஊர்காவல் படையில் பணியாற்றுகின்றனர்.

Advertisement

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் ஊர்க்காவல் படை பட்டாலியன்கள் செயல்படுகிறது.

உள்ளூர் போலீஸாருடன் இணைந்து, இரவு ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைப்  பாதுகாப்பு, கோவில் திருவிழாவில் பாதுகாப்பு, தேர்தல் அவசரப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஊர்க்காவல் படை தொடங்கப்பட்ட சமயத்தில் இதில் பணிபுரிந்தவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.31 ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.150 ஊதியம் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதத்துக்கு 30 நாள்கள் பணி வழங்கப்படுகிறது.

அத்துடன் அவர்களுக்கு மாதம் ரூ.8,000 ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதத்துக்கு 15 நாள்கள் மட்டுமே பணி வழங்கி நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ.2,250 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஓர் ஆண்டாக இந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. மேலும் குறைந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து ஊர்க்காவல் படையினர் கூறுகையில், "மாதத்துக்கு 15 நாள்கள்தான் பணி என கூறப்படுகிறதே தவிர மற்ற நாள்களில் அழைத்தாலும் பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

கோவில் திருவிழாக்கள், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கடி போலீஸ் துறையில் இருந்து அழைக்கின்றனர்.

இதனிடையே முதல்வர் சிறப்பு இளைஞர் காவல் படை திட்டத்தை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் காவல் படை செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதே பணியைதான் நாங்கள் செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கும் மாதம் ரூ.7,500 ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் தகுதியான இளைஞர்களுக்கு சிறப்பு காவல் படையில் சேர வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றனர்.

ஊர்க்காவல் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேவை நோக்கம் கொண்டவர்கள்தான் ஊர்க்காவல் படையில் பணி அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு ஊதியத் தொகை ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் போட்டு வழங்கப்படுகிறது.

இதனால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள தொகை ஊதியம் வழங்க போதுமானதாக இல்லை. இதனால் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்டு எஸ்.பி. மூலம் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் ஊதியம் வழங்கப்படும். மாதத்துக்கு 30 நாள்கள் பணி அளிப்பது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.