முகப்பு
தமிழ்நாடு

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டது மாமண்டூர் ஏரி!

வரலாற்று சிறப்பு மிக்க மாமண்டூர் ஏரி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 10:15 AM
பகிர்:

வரலாற்று சிறப்பு மிக்க மாமண்டூர் ஏரி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 செய்யாறு தாலுகா எல்லையில் அமைந்துள்ள மாமண்டூர் ஏரி திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெரிய ஏரியாகும். இந்த ஏரி கி.பி. 6ஆம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்டது.
 இயற்கையாக அமைந்துள்ள இரண்டு குன்றுகளுக்கிடையே ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. குன்று உள்பட ஏரிக்கரையின் நீளம் 3.5 கி.மீ. ஆகும். 1.5 கி.மீ. தூரம் கரை அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையின் மேல் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 காஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து ராஜா கால்வாய் மூலம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இது முக்கிய கால்வாயாகும். வட இலுப்பைக் கால்வாய், செய்யாறை அடுத்த வடஇலுப்பை கிராமப் பகுதி பாலாற்றுப் படுகையில் மதகு அமைக்கப்பட்டு ஐயங்கார்குளம், நமண்டி, அரிகரப்பாக்கம் வழியாக வந்தடைகிறது. மற்றொன்று தூசி தென்னம்பட்டு பிராதான கால்வாய் ஆகும். இந்தக் கால்வாய் ஆர்க்காட்டை அடுத்த புதுப்பாடி பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் தொடங்கி பாலாறு அணைக்கட்டு, ராந்தம் ஏரி, தென்னம்பட்டு ஏரி, பெருங்கட்டூர், வெம்பாக்கம், திருப்பனமூர், கீழ்நெல்லி, அரிகரப்பாக்கம் வழியாக மாமண்டூர் ஏரிக்கு நீர் வந்தடைகிறது. அதேபோல தண்டரை அணைக்கட்டுக் கால்வாய். இந்த கால்வாய் வழியாக செய்யாற்றுப் படுகையில் தொடங்கி அருகாவூர், வடதண்டலம், தும்பை, பல்லி, சித்தாத்தூர் வழியாக ஏரிக்கு நீர் வந்தடைகிறது.
 மொத்தம் 13.88 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள மாமண்டூர் ஏரியின் கொள்ளளவு 1799 மில்லியன் கன அடியாகும். தூசி மேட்டு மதகு, பள்ள மதகு மூலம் 1650 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல மாமண்டூர் மேட்டு மதகின் மூலம் 1401 ஏக்கரும், பள்ள மதகின் மூலம் 1067 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
 மாமண்டூர் ஏரியில் ஒரு முறை நீர் நிரம்பிவிட்டால் மூன்று போகம் சாகுபடி செய்யலாம். குறைந்தது எட்டு மாதங்களுக்காவது பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும்.
 மாமண்டூர் ஏரி மூலம் தூசி, குரங்குணில்முட்டம், பல்லாவரம், கனிகிலுப்பை, மாமண்டூர், வடகல்பாக்கம், நரசமங்கலம், வாழவந்தல், கீழ்நாய்க்கன்பாளையம், திரிஞ்சாபுரம், மேனல்லூர், பூனைத்தாங்கல், சோதியம்பாக்கம், பகவந்தபுரம், ஏழாச்சேரி, அழிஞ்சல்பட்டு, வாகை, சேனையநல்லூர் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
 நீர்வரத்துக் கால்வாய்களை பொதுப்பணித் துறை சரியாக பராமரிக்காததால், கால்வாய்களில் முள்செடி, கோரை என வளர்ந்து புதர் மூடிக்கிடக்கின்றன. கடந்த சில மாதங்களில் பெய்த மழையினால் தண்டரை அணைக்கட்டு கால்வாயில் நீர் வந்தும் அது ஏரியை சென்றடையவில்லை. இந்த நீர், பாசன வசதி செய்யப்படாத பரிதிபுரம், புளியரம்பாக்கம் ஏரிகளில் வீணாகத் தேங்கி நிற்கிறது.
 மாமண்டூர் ஏரி மூலம் பாசன வசதிப் பெற்ற கிராம மக்கள் 90 சதவீதம் பேர் விவசாயத்தையே தொழிலாக செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரி முழுமையாக நிரம்பாததால், விவசாயத்துக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளில் பலர் வேலை தேடி காஞ்சிபுரம், சென்னை போன்ற ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
 வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருவதும், பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகளில் நீர் வரத்துக் குறைந்ததும், நீர் வரத்துக் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததுமே மாமண்டூர் ஏரி வறண்டு போனதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
 நவரை பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர்விட்ட நிலையில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது கவலையில் உள்ளனர்.
 மாமண்டூர் ஏரியில் ஒரு முறை
 நீர் நிரம்பிவிட்டால்
 மூன்று போகம் சாகுபடி
 செய்யலாம். குறைந்தது
 எட்டு மாதங்களுக்காவது
 பாசனத்துக்கு தண்ணீர்
 கிடைக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.