காடானது விளைநிலங்கள்: வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் விவசாயிகள்
கடலூர் மாவட்டத்தில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வராமல் மத்திய நிபுணர் குழுவும் புறக்கணித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வராமல் மத்திய நிபுணர் குழுவும் புறக்கணித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.
÷கடலூர் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பு 5 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர். மாவட்டத்தில் மொத்தம் 2.22 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் டெல்டா பகுதியான சிதம்பரம் வட்டத்தில் மட்டும் 1.16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
÷கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரவில்லை. மேலும் மழை குறைவால் அனைத்து ஆறு, குளம், கண்மாய்கள் வறண்டு விட்டன.
Advertisement
÷இதனால் நெல் சாகுபடி பரப்பு 30 ஆயிரம் ஏக்கராக குறைந்தது. நிலத்தடி நீரை நம்பி நெல் பயிரிட்ட விவசாயிகளும் தண்ணீர் பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு போன்றவற்றால் பெரும் இழப்புக்கு ஆளாகினர். இதனால் விவசாயிகள் வறுமையில் வாடி கடனில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.
÷இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய 7 வருவாய் வட்டங்களில் விவசாயம், தோட்டகலை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
÷இதில் டெல்டா பகுதியான சிதம்பரம் வருவாய் வட்டத்துக்கு மட்டும் வறட்சி பாதிப்பு உள்ளதாக, முதல்வர் அறிவித்த ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கும் திட்டத்தில் 8,554 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
÷இதிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 25 சதவீதம் பேருக்கு கூட நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
÷மற்ற 6 வருவாய் வட்டங்களில் விளைச்சல் பாதிப்பு 50 சதவீத அளவுக்கு குறைவாக இருப்பதாக அரசுக்கு அறிக்கை அனுப்பியதால், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழுவும், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழுவும் கடலூர் மாவட்டத்துக்கு வரவில்லை.
÷வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறைகளின் மெத்தனமே அரசின் கவனத்துக்கு வறட்சி நிலவரம் சென்று சேராததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
÷அதிகாரிகளிடம் கேட்டால் "சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் 50 சதவீதத்துக்கு மேல் விளைச்சல் பாதிப்பு இருந்தால் மட்டுமே கணக்கெடுப்போம். மாவட்டத்தில் விவசாயிகள் வறட்சியால் சாகுபடியை நிறுத்தி விட்டனர். இதனால் பாதிப்பில்லை என காரணம்' கூறுகின்றனர்.
÷விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "பல விவசாயிகள், நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலையில், பிழைப்புக்காக ஹோட்டல்களிலும், கட்டடப் பணிகளிலும் தொழிலாளிகளாக ஈடுபட்டுள்ளனர்.
÷வறட்சி நிலவரம் குறித்து அதிகாரிகள் முறையாக கணக்கெடுக்கவில்லை. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருவாய்த் துறை, விவசாய, தோட்டக்கலைத் துறைகளிடம் மனு கொடுத்துள்ளனர்.
÷இந்த மனுக்கள் மீது முதல் கட்ட விசாரணை நடத்தக் கூட அதிகாரிகள் முன்வரவில்லை. அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தராவிட்டால், விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.
÷இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வறட்சி பாதிப்பு குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட முடியாது. மத்திய குழு தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மட்டுமே சென்று பாதிப்பை ஆய்வு செய்துள்ளது.
÷எனவே கடலூர் மாவட்டத்துக்கு வரவில்லை' என்றனர்.