முகப்பு
தமிழ்நாடு

2 மாதங்களில் 60% மனுக்களுக்கு தீர்வு

வீடு தேடி வரும் வருவாய் அலுவலர்கள் திட்டமான அம்மா திட்டத்தைக் கண்காணிக்க புதிய வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:49 AM
பகிர்:

வீடு தேடி வரும் வருவாய் அலுவலர்கள் திட்டமான அம்மா திட்டத்தைக் கண்காணிக்க புதிய வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் மாவட்டந்தோறும் பெறப்பட்ட மனுக்களில் 60 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும், இரண்டு மாவட்டங்களில் 100 சதவீதத் தீர்வை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டா மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகை கோருதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள்,வாரிசுரிமை சான்றிதழ், குடும்பத்தில் முதல் பட்டதாரி, விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் என அனைத்து வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு, வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், பொது மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை நாடிச் செல்வதைத் தவிர்த்து, ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம்கள் மூலம் அதிகாரிகளே மக்களைத் தேடி அவர்களின் கோரிக்கைகளை, புகார்களை பெற்று, தீர்வுகாணும் புதிய திட்டமான அம்மா திட்டத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

அனைத்து மாவட்டங்கள்: சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை 32 மாவட்டங்களிலும் வருவாய்த் துறை அதிகாரிகள் முகாம்களை அமைத்து பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்று வருகின்றனர். வாரந்தோறும் வெவ்வேறு பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில் ஏற்கப்பட்டு முடிவு செய்யப்பட்டவை 52 ஆயிரத்து 567 ஆகும். நிராகரிக்கப்பட்ட மனுக்கள் 24 ஆயிரத்து 23. நிலுவையில் உள்ள மனுக்கள் 50 ஆயிரத்து 847 ஆகும். மொத்தம் 60 சதவீதம் மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன.

திருவாரூர், தேனி முதலிடம்: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் திருவாரூர் மற்றும் தேனி மாவட்டங்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் நிலுவை ஏதுமின்றி 100 சதவீதத் தீர்வு காணப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97 சதவீத தீர்வையும், திருச்சி 92 சதத்தையும், விருதுநகர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்கள் 91 சதவீத தீர்வையும் எட்டியுள்ளன.

கண்காணிப்பு தீவிரமாகிறது: வீடு தேடி வருவாய் அதிகாரிகள் செல்லும் திட்டத்தை கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிகளிலும்

முகாம்களை நடத்தி பெறப்படும் மனுக்கள் குறித்த விவரங்களை, தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் அளிக்க வேண்டும்.

மனுக்கள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பதிவு செய்வார். இவ்வாறு பதிவு செய்வதற்கு தனியான மென்பொருள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அளிக்கப்படும். இந்த மென்பொருளை தயாரிக்கும் பணியை தேசிய தகவலியல் மையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த மென்பொருளின் மொத்தக் கட்டுப்பாடும் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருக்கும். மாவட்ட வாரியாக பெறப்படும் மனுக்கள் மற்றும் தீர்வு செய்யப்படும் விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலமாக தனியான மென்பொருள் மூலம் வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.

இதன் மூலம், அம்மா திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதத் தீர்வை எட்ட முடியும் என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.