மீன் கழிவுகளைக் கொண்டு கலைப்பொருள்கள்
மீன் கழிவுகளில் இருந்து கலைநயமான பொருள்களை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் கன்னியாகுமரி இளைஞர் பினு.
மீன் கழிவுகளில் இருந்து கலைநயமான பொருள்களை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் கன்னியாகுமரி இளைஞர் பினு.
கடல் சிப்பிகளைக் கொண்டு கலைப்பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பினுவின் (31) பூர்வீகம் கேரளம். தொழில் தேடி கன்னியாகுமரிக்கு வந்த பினுவின் தந்தை ராமசந்திரனுக்கு நிரந்தரமாகத் தொழில் கிடைத்ததால் கன்னியாகுமரியிலேயே தங்கிவிட்டார்.
பினு வேலைநேரம் தவிர, பிற நேரங்களில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் புகைப்படம் எடுத்துத் தரும் பணியும் செய்துவருகிறார். படித்தது 5-ஆம் வகுப்பு வரை. கடல் சிப்பிகளில் பொருள்கள் தயாரிப்பதை பினு நுணுக்கமாகக் கற்றதன் விளைவாக, அவர் வேலைபார்த்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரை கோவாவுக்கு அனுப்பியது. அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து 45-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு கடல் சிப்பியில் நவீன கலைப்பொருள்கள் தயாரிக்கும் கலையைப் பயிற்றுவித்து வந்தார். மீன் கழிவுகளில் இருந்து மிகச்சிறிய வடிவில் பொருள்களை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுகிறார் பினு. அவர் மேலும் கூறியதாவது:
கன்னியாகுமரி மீனவர்கள் நிறைந்த பகுதி என்பதால் மீன் கழிவுகளான செதில், முள், தோல் ஆகியவை எனக்கு எளிதாகக் கிடைக்கிறது. கோவளம், சின்னமுட்டம், வாவத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கழிவுகளை எடுத்துவந்து அவை கெடாமல் இருக்க ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துகிறேன். நான் தயாரிக்கும் பொருள்கள் 50 ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் இருக்கும். சாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தால், கடற்கரையில் புகைப்படம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இதுபோன்ற பொருள்களை தயாரித்து வருகிறேன்.
நண்பர்கள் சிலர் கொடுத்த ஆலோசனையின்பேரில் என்னுடைய தயாரிப்புகளை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குநர் பாலுவிடம் நேரில் காண்பித்தேன்.
அவர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியதோடு இதுபோன்ற தயாரிப்புகள் குறித்து யாரும் இன்னும் பதிவு செய்யவில்லை. எனவே மீன் கழிவுகளைக் கொண்டு கலைப்பொருள்களைத் தயாரித்து சாதிக்கலாம் என ஊக்கப்படுத்தி சான்றிதழ் அளித்தார். எனக்கு அரசு உதவிகளை செய்யும்பட்சத்தில் மேலும் பல கைவினைக் கலைஞர்களை உருவாக்குவேன் என்றார்.