முகப்பு
தமிழ்நாடு

தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் சோழவரம் காவல் எல்லை பிரிக்கப்படுமா?

சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளி சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை களையும் வகையில் இக்காவல் நிலைய எல்லையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையேக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு

தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் சோழவரம் காவல் எல்லை பிரிக்கப்படுமா?

சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளி சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை களையும் வகையில் இக்காவல் நிலைய எல்லையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையேக் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளி சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை களையும் வகையில் இக்காவல் நிலைய எல்லையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையேக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி (சப் டிவிஷன்) காவல் துணை கண்காணிப்பாளரின் அலுவலகத்தின் கீழ் பொன்னேரி, மீஞ்சூர், காட்டூர், திருப்பாலைவனம், சோழவரம் ஆகிய 5 காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. மேற்கண்ட 5 காவல் நிலைய எல்லைகள் சுமார் 60 கி.மீ தூரத்துக்குள் அமைந்துள்ளன.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சோழவரம் காவல் நிலையத்தின் எல்லை சென்னை மாநகர காவல் நிலைய எல்லை வரை நீண்டுள்ளது. சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் 75-க்கும் மேற்பட்ட கிராமங்களும், அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.

மேலும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரம் வரை சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளில் சிக்கி காயம் மற்றும் உயிரிழப்போரை சோழவரம் போலீஸார்தான் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதே போல சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூரியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகிலும், காரனோடை பாலம் மற்றும் ஜனப்பசத்திரம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய சோழவரம் போலீஸாரே செல்ல வேண்டியுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குள் அமைந்துள்ள செங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் காந்திநகர், எடப்பாளையம், அலமாதி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. ஆனால் இங்கிருந்து 12 கி.மீ தூரமுள்ள சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் மேற்கண்ட பகுதிகள் அமைந்துள்ளன.

சென்னை புறநகர் பகுதியான செங்குன்றத்தை ஒட்டியுள்ள காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

பெருகும் குற்றம் - திணறும் போலீஸ்: சோழவரம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியான அலமாதி கூட்ரோடில் அர்ஜூனுக்கு சொந்தமான பலசரக்கு கடையை நவம்பர் 9-ஆம் தேதி இரவு உடைத்த கொள்ளையர்கள் உள்ளே பணம் ஏதும் இல்லாததால் ஆத்திரமடைந்து கடைக்கு தீவைத்து விட்டு சென்றனர். இதில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின.

இதே போன்று நவம்பர் 10-ஆம் தேதி புதூர் கிராமத்தில் விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நவம்பர் 18-ம் தேதி அலமாதி பகுதியைச் சேர்ந்த ஜெகன்மோகன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரு.2 லட்சமும், நவ.19-ஆம் தேதி மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வீட்டில் 12 சவரன் நகை, ரூ.25ஆயிரமும், நவ. 27-ஆம் தேதி ஜனப்பச்சத்திரம் பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த சென்ற ஆந்திர மாநில அடகு கடை வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து 37 சவரன் நகை, ரூ.1 லட்சம் என்று கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறியது. தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை சோழவரம் போலீஸார் கைது செய்யவில்லை.

போலீஸார் ரோந்து செல்வதில்லை... சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள முக்கிய பகுதிகளில் போலீஸார் இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

காவல் எல்லையை பிரிப்பவதே தீர்வு: செங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து 4 கி.மீ தூரமுள்ள எடப்பாளையம், அலமாதி, நல்லூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சோழவரம் காவல் நிலைய எல்லையில் இருந்து பிரித்து செங்குன்றத்தோடு இணைக்க வேண்டும். அல்லது செங்குன்றம் காவல் நிலையத்தின் எல்லைகுட்பட்ட பாடியநல்லூர் பகுதியில் புதிதாக காவல் நிலையத்தை அமைக்க சென்னை மாநகர காவல்த்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இப்பகுதிகளில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் குறையும். சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த 30 நாட்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தனிப்படை ஒன்றை அமைக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →