மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலையில் 3% ஒதுக்கீடு: தமிழகத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமலாகிறது
தமிழக அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு (பேக்-லாக்) காலிப் பணியிடங்களை பட்டியலிட்டு அனுப்புமாறு அனைத்துத் துறைகளையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு (பேக்-லாக்) காலிப் பணியிடங்களை பட்டியலிட்டு அனுப்புமாறு அனைத்துத் துறைகளையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வகைசெய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு துறையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து அதற்கான பட்டியலை அளிக்கும்படி கேட்டு அனைத்து அரசுத் துறைகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை காலியாக உள்ள பின்னடைவு காலியிடங்களை தெரிவிப்பதற்கு வசதியாக ஒரு சிறப்புப் பட்டியலையும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அனுப்பி வைத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை ஏற்கெனவே உள்ளது.
அதில், பார்வையற்றோருக்கு ஒரு சதவீதம், காது கேளாதோருக்கு ஒரு சதவீதம் மற்றும் கைகால் ஊனமுற்றோருக்கு ஒரு சதவீதம் என பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி சி மற்றும் டி-யின் கீழ் உள்ள அனைத்து பணியிடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏ மற்றும் பி பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 117 பணியிடங்கள் தகுதியான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் அரசுப் பணி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் ஏராளமான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளதால் அவற்றை உடனடியாக நிரப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவரம்:
அனைத்து அரசுத் துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், இதுவரை நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிந்து 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த அந்தந்த துறைகள் ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடவடிக்கையில் இறங்கியது தமிழக அரசு: உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இது குறித்து, அந்தத் துறையின் செயலாளர் பி.சிவசங்கரன் அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊனமுற்றோருக்கான 3 சதவீதம் பின்னடைவு காலிப் பணியிடங்களை 2002 ஆம் ஆண்டு முதல் உடனடியாக கண்டறிய வேண்டும்.
வேலைவாய்ப்பு வழங்கும் முகமைகள் மூலம் அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் சிறப்புத் தேர்வு மூலம் மாற்றுத் திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, இந்தக் கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் காலிப் பணியிடங்கள் பட்டியலைத் தயார் செய்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு அனுப்ப வேண்டும்.
காலதாமதம் வேண்டாம்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் காலதாமதமின்றி உடனடியாக விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.