அணுஉலை விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த நடவடிக்கை:கூடங்குளம் அணுஉலை முதுநிலை பொறியாளர் தகவல்
அணுஉலைகள் அறிவியலின் அற்புதம் என்ற விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
அணுஉலைகள் அறிவியலின் அற்புதம் என்ற விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதன்மைப் பொறியாளரும், பொது விழிப்புணர்வுக் குழுத் தலைவருமான எஸ்.காளிராஜன்.
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், திருநெல்வேலி அருகே தச்சநல்லூரில் உள்ள தாமிரபரணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அணு அறிவியல் திருவிழாவைத் தொடங்கி வைத்த எஸ்.காளிராஜன், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் விளங்கி வருகிறது. அணுஉலைகள் என்பவை அறிவியலின் அற்புதம். இதுபற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி ஆகிய கல்வி மாவட்டங்களில் தனித்தனியாக அணு அறிவியல் திருவிழா என்னும் பெயரில் அறிவியல் கண்காட்சி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகம், விநாடிவினா, ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
முதன்முதலில் தென்காசியில் நடத்தப்பட்ட இந்தத் திருவிழா, 2 ஆவதாக திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் 85 பள்ளிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 3 ஆவதாக சேரன்மகாதேவி கல்விமாவட்டத்திற்கு உள்பட்ட வள்ளியூரில் இம் மாதம் 11 ஆம் தேதி அணு அறிவியல் திருவிழா நடைபெறுகிறது. இந்த மூன்று பகுதிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களைத் தேர்ந்தெடுத்து வருவாய் மாவட்ட அளவிலான போட்டி, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் வைத்து இம் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார் அவர்.
அணுஅறிவியல் திருவிழா தொடக்க விழாவில் தாமிரபரணி பொறியியல் கல்லூரித் தலைவர் எம்.ஆர்.பால்ராஜ் தலைமை வகித்தார். அணுமின் நிலைய மனிதவள முதுநிலை மேலாளர் கே.அன்புமணி முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எஸ்.கணபதி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் ஈ.ராமசாமி, முதல்வர் சி.நெல்சன் கென்னடி பாபு, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் வி.டோரா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அணுமின் நிலைய பொது விழிப்புணர்வுக் குழு உறுப்பினர் ஆர்.வேலுமயில்முருகன் நன்றி கூறினார்.