நெல்லை அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி வியாபாரி சாவு
திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதி வியாபாரி உயிரிழந்தார்.கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த முகமதுஅமீன்
திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதி வியாபாரி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த முகமதுஅமீன் மகன் நூருல்அமீன் (34). பேன்சி பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது நண்பரான திருவிதாங்கோட்டைச் சேர்ந்த ஜாஹீர்உசேன் (32) நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்வதற்கு தனியார் பேருந்தில் டிக்கெட் எடுத்திருந்தாராம். ஆனால், நாகர்கோவிலுக்கு ஜாஹீர்உசேன் வருவதற்கு முன்பு பேருந்து புறப்பட்டு விட்டதாம்.
இதனால், திருநெல்வேலியில் வைத்து தனியார் பேருந்தில் ஏறிவிடலாம் என்று காரில் ஜாஹீர்உசேன் புறப்பட்டுள்ளார். அவருடன் ஜஹாங்கீர், இர்பான் ஆகியோர் வந்தனராம். நூருல் ஆமீன் காரை ஓட்டியுள்ளார். திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டி பாலம் பகுதியில் 4 வழிச்சாலையில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் நூருல் ஆமீன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜாஹீர்உசேன் உள்பட 3 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.