முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் முதல் ரயில்வே பெண் காப்பாளர் பதவி ஏற்பு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முதல் ரயில்வே பெண் காப்பாளராக தே. தம்புரு (28) திங்கள்கிழமை பதவி ஏற்றார். திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:35 AM
பகிர்:

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முதல் ரயில்வே பெண் காப்பாளராக தே. தம்புரு (28) திங்கள்கிழமை பதவி ஏற்றார். திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் தனது காப்பாளர் பணியை தம்புரு தொடங்கினார்.

ரயில்வேதுறையில் காப்பாளர் பணியிடத்தில் பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்புரு, திவ்யா ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்கலாவை சேர்ந்தவர் தேவபிரசாத் மகள் தம்புரு (28).

பி.எஸ்.சி., பி.எட், டி.சி.ஏ. படித்துள்ள இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ரயில்வே காப்பாளர் பணியிடத்திற்கான தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெற்ற அவர் தட்டச்சுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதை அடுத்து அவர் காப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே பயிற்சி மையத்தில் 43 தினங்கள் பயிற்சி பெற்றார்.
திங்கள்கிழமை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் காப்பாளராக தம்புரு பணியில் சேர்ந்தார். திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் தனது பணியை தம்புரு தொடங்கினார். இப்பயணிகள் ரயிலில் காப்பாளர் பணியில் இருந்த ராஜ்குமார்,  ஒவ்வொரு நிலையத்திலும் கொடி அசைத்து ரயிலை நிறுத்துவது, மீண்டும் இயக்க சமிக்ஞை கொடுப்பது, பயணிகள் பாதுகாப்பு, ரயில் வந்து செல்லும் நேரத்தை கண்காணித்தல் போன்றவை குறித்து தம்புருவுக்கு பயிற்சி அளித்தார். ஒரு வார பயிற்சிக்கு பிறகு பணியினை தொடர்ந்து மேற்கொள்வார்.

ரயில்வே காப்பாளராக பணியில் சேர்ந்தது குறித்து தம்புரு கூறியதாவது: நானும் கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த திவ்யா இருவரும் இத்தேர்வில் வெற்றி பெற்று திருச்சியில் பயிற்சி பெற்றோம். திவ்யா மதுரை ரயில் நிலையத்தில் காப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார். நான் திருநெல்வேலியில் பணியில் சேர்ந்துள்ளேன். கல்வித்துறையில் ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். பி.எஸ்.சி., பி.எட். படித்தபோதிலும் ரயில்வேதுறையில் காப்பாளராக பணி செய்ய வேண்டும் என விரும்பி இப்பணியினை தேர்வு செய்தேன். ரயில்வேதுறையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் எனது உறவினர் விவின் பணி செய்து வருகிறார். ஆகவே இத்துறையில் எனக்கு விருப்பம் ஏற்பட்டது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →