முகப்பு
தமிழ்நாடு

கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் மாடுகள் கேரளத்துக்கு இறைச்சிக்காக விற்கப்படும் அவலம்

தமிழகக் கோயில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டு, இறைச்சிக்காக கேரள மாநிலத்துக்கு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

Updated On : 1 ஜனவரி, 2015 at 3:47 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:49 AM

தமிழகக் கோயில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டு, இறைச்சிக்காக கேரள மாநிலத்துக்கு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 38,491 கோயில்கள் உள்ளன. இதில் சுமார் 36,500 கோயில்களின் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. தமிழகக் கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக பசு, காளை மாடுகளைக் காணிக்கையாக வழங்குவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோயில்களுக்குக் காணிக்கையாக வழங்கும் மாடுகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலரால் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கோயில் மாடுகளை வாங்குவதற்கென்றே சில இடைத்தரகர்களும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விலைக்கு வாங்கும் கோயில் மாடுகளை வியாபாரிகள் கேரள மாநிலத்துக்கு சட்ட விரோதமாகக் கடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

இதுதொடர்பாக, கோவை கால்நடைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி எஸ்.நிஜாமுதீன் கூறியது:

தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக மாடுகளை லாரிகள் மூலம் கோவை வழியாக கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்கின்றனர். லாரிகளில் 6 முதல் 9 மாடுகளை மட்டுமே எடுத்துச் செல்ல சட்ட விதிமுறைகள் உள்ளன.

ஆனால், ஒரே லாரியில் 50-க்கும் மேற்பட்ட மாடுகளை அடைத்து வைத்து கேரளத்துக்கு அனுப்புகின்றனர். கோவை வழியாக மட்டும் நாளொன்றுக்கு சுமார் 100 லாரிகளில் சட்ட விரோதமான முறையில் மாடுகள் கடத்தப்படுகின்றன.

மாடுகளுக்கு தீவனம், தண்ணீர் எதுவும் அளிக்காமல் சுமார் 100 முதல் 800 கி.மீ. தொலைவு வரை இரக்கமற்ற முறையில் லாரிகளில் அடைத்து வைத்துக் கொண்டு செல்கின்றனர்.

அதனால், சட்ட விரோதமாகக் கடத்தப்படும் மாடுகளை உரிய முறையில் கண்காணித்து மீட்க கால்நடை கடத்தல் தடுப்புப் பிரிவை மாநில அரசு உருவாக்க வேண்டும்.

மேலும், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மாடுகளை அதிகாரிகள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். கோயில் மாடுகள் வியாபாரிகளால் வாங்கப்பட்டு, கேரள மாநிலத்துக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் அவலம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநில அரசு தலையிட்டு, மாடு கடத்தலைத் தடுக்கவும், பாதுகாப்பான முறையில் மாடுகளை லாரிகளில் எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தவும் வேண்டும். மேலும், கோயில் மாடுகள் விற்பதைக் கண்காணித்து, அதில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமன்றி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கென தனிக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து சேலம் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் கூறியது:

தமிழகக் கோயில்களில் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் பசு மாடுகள் குறித்த விவரங்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மாவட்ட உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆனால், கோயில்களுக்கு பக்தர்களால் வழங்கப்படும் மாடுகள் குறித்து உண்மையான தகவல்கள் இருப்பதில்லை. மாறாக, கோயிலில் உள்ளவர்களே மாடுகளை விற்பனை செய்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. கோயில் மாடுகள் குறித்த கணக்கெடுப்பை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாடுகள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகக் கோயில்களில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாகப் பெறப்படும் மாடுகளை முறையாகப் பராமரித்து வருகிறோம். அதேபோல, வளர்க்க போதுமான வசதி, இட வசதிகள் இல்லையெனில் பழனி அருகேயுள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்து பராமரிக்கப்படுகிறது. கோயில் மாடுகளை விற்பதாகப் புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.