முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நல்லூர் சுங்கச்சாவடி

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை முதல் ஆந்திர மாநில நுழைவு எல்லையான தடா வரை உள்ள 43 கி.மீ. தூரத்துக்கு ரூ.418 கோடியே 80 லட்சம் மதிப்பில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதையில் இருந்து 6 வழிப்பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் காரனோடையில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டாவது மேம்பாலம் கட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இதே போன்று சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை சந்திப்பில் உள்ள தச்சூர் கூட்டுச்சாலை பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இச்சாலையையை ஆறுவழிப்பாதையாக மாற்றும் பணிகளை செய்து வரும் தனியார் கட்டுமான நிறுவனம் இச்சாலையில் செல்லும் வாகனங்களிடம் சுங்கவரி வசூலிப்பதற்காக சோழவரம் அருகே நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களில் செல்வோரிடம் வரி வசூல் செய்து வருகிறது.

சென்னையில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரம் உள்ள நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் லாரி உரிமையாளர்கள் அப்போது சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னைக்கு அருகாமையில் சுங்கச்சாவடி அமைத்துள்ளதால் சோழவரம், காரனோடை, பொன்னேரி, ஆரணி, பெரியபாளையம், புதுவாயல், கவரப்பேட்டை, ஆண்டார்குப்பம், பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தச்சூர், மாதவரம், நத்தம், பண்டிக்காவனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகளும் சுங்கவரி செலுத்தியப் பிறகே சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் சோழவரத்தில் இருந்து 10 கி.மீ. தூரமுள்ள செங்குன்றத்துக்கு சென்று வர குறைந்தபட்சம் ரூ.100 வரை சுங்கவரி செலுத்து வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசல், அதிகக் கட்டணம் போன்ற காரணங்களால் மேற்கண்ட பகுதி மக்கள் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிக கட்டணம்-மாற்றுப் பாதையில் செல்லும் வாகனங்கள்: அதேப்போல, வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகம் மற்றும் திருவொற்றியூர், மணலி, கொண்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் கன்டெய்னர் கிடங்குகளுக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியைக் கடந்துச் செல்ல சுங்கவரியாக குறைந்தது ரூ.300 வரை செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள தச்சூர் கூட்டுச்சாலை பகுதியில் பிரிந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாகச் செல்கின்றனர்.

இதன் காரணமாக பொன்னேரி-மீஞ்சூர், தச்சூர்-பொன்னேரி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. மேலும் அதிகளவிலான கனரக வாகனங்கள் தச்சூர்-பொன்னேரி சாலையில் செல்வதால் இச்சாலை அடிக்கடி சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிடுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதைத் தவிர்க்க மாநில நெடுஞ்சாலையான திருவொற்றியூர்-பொன்னேரி சாலையில் செல்கின்றன. இதனால் இச்சாலையில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும் பொன்னேரி, மீஞ்சூர் வழியாக செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும் வகையில் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாய் உள்ளது.

இங்குள்ள சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இச்சாலையில் பயணம் செய்வோர் மற்றும் அவசர சிகிச்சைக்கு மருத்துமவனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்படும் நோயாளிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →