முகப்பு
தமிழ்நாடு

தலித்கள் மீது தாக்குதல்:நடவடிக்கைகோரி விடுதலைச் சிறுத்தைகள் மனு

தலித்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 9 ஜூன், 2014 at 7:36 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:03 AM

தலித்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சாவடி பிரிவிலிருந்து சோரியாங்குப்பம் வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள உண்ணாமலை செட்டி சாவடியை சேர்ந்த இளைஞர்கள், சிலர் அருகில் உள்ள பனங்காட்டு காலனி வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர்களை வழிமறித்த அப்பகுதியை சேர்ந்த சிலர், சரமாரியாக தாக்கி 2 பைக்குகளை சேதப்படுத்தியுள்ளனர். இதில் உண்ணாமலைசெட்டி சாவடியை சேர்ந்த கணேசன் என்பவர் படுகாயமடைந்தார்.

 இதனிடையே பனங்காட்டு காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் திருமண நிகழ்ச்சி நடைபெறுவதை அறித்த, உண்ணாமலைசெட்டி சாவடியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், நிகழ்ச்சி நடைபெறும் சமுதாயக்கூடத்திற்கு சென்று, மண்டபத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியான பந்தல், உணவு பொருட்கள் மற்றும் இருக்கைகளை அடித்து நொறுக்கினர். இதில் மணப்பெண் பூமாலினியின் தந்தை ஏகாம்பரம், உறவினர் அருள் இருவரும் படுகாயமடைந்தனர்.

Advertisement

 இதனால் இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் வலுத்தது. இதையடுத்து தகவலறிந்த டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீஸார், உண்ணாமலைசெட்டி சாவடியில் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டோரை கட்டுப்படுத்தினர்.

 அப்போது, அந்த வழியாக சென்ற லாரி மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் லாரி ஓட்டுநர் காயமடைந்தனர். இதையடுத்து அதிவிரைவுப்படை போலீஸôர் அங்கு குவிக்கப்பட்டு, மறியலில் ஈடுபட முயன்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது போலீஸ் தடியடியில், ஒருவர் காயமடைந்தார்.

 இதைத்தொடர்ந்து உண்ணாமலைசெட்டி சாவடி மற்றும் பனங்காட்டு காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் மோதல் சம்பவம் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் தாமரைச்செல்வன் தலைமையில், பனங்காட்டு காலனியை சேர்ந்த மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரை சந்தித்து ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப மனு அளித்தனர்.

 அதில் உண்ணாமலைச் செட்டி சாவடியைச் சேர்ந்த ஆதிநாராயணன்,பக்கிரி, சுப்ரமணி, சுரேஷ்,அருள், கணேசன், ஜீவா, சங்கர், அனந்து, ராஜேஷ் மற்றும் புதுச்சேரி சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த சிலர், உண்ணாமலை செட்டி சாவடி சமுதாய நலக்கூடத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் இல்ல சுப நிகழ்ச்சியில் அராஜகம் செய்து, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

 மேலும் அங்கிருந்து உணவுப் பொருள்களையும் சேதப்படுத்திவிட்டனர். இதன் மூலம் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.