சிதம்பரம் ரயில்நிலையத்தில் திருப்பதி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் நிற்காது: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
ராமேஸ்வரம்- திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புவனேஸ்வர்- ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஜூலை 1-ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது
ராமேஸ்வரம்- திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புவனேஸ்வர்- ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஜூலை 1-ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சிதம்பரம் நகர மக்கள் அதிர்ச்சியிலும், தென்னக ரயில்வே மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சிதம்பரம் வழியாக திருப்பதி-ராமேஸ்வரம் (16779) எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம்-திருப்பதி (16780) ஆகிய ரயில்கள் சிதம்பரம் வழியாக வாரம் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய தினங்களில் செல்கிறது. இதுநாள் வரை மேற்கண்ட ரயில்கள் சிதம்பரத்தில் நின்று சென்று வருகிறது. இந்நிலையில் குறைந்த பயணிகள் ஏறுவதாக கூறி வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் மேற்கண்ட ரயில்கள் சிதம்பரத்தில் நிறுத்தப்படாது என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் சிதம்பரம் பகுதி மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோன்று சிதம்பரம் வழியாக ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் செல்லும் ரயிலும் (18496), சனிக்கிழமை ராமேஸ்வரம் செல்லும் ரயிலும் (18495) வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயில் நகரமும், சுற்றுலா நகரமுமான சிதம்பரம் ரயில்நிலையத்தில் இதுவரை நிறுத்தப்பட்டு வந்த மேற்கண்ட ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளதால், சிதம்பரம் சுற்றுப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.