தெய்வச்செயல்புரம் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின்
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் புதன்கிழமை (ஜூன் 25) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் நடத்தப்படும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வுக்கு வித்திடும் அனைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும், தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை.
தூத்துக்குடி மாவட்டம், தெய்வசெயல்புரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் நிலம் 915 ஏக்கர் நிலத்தை திமுகவைச் சேர்ந்த செல்வம், தூத்துக்குடி அதிமுக ஒன்றிய செயலர் சண்முகவேல் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் பிரச்னையில் முதல்வர் தலையீட்டு விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் ராதாகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கான உண்மை காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தவறான போக்காகும். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறி எதிர்மனுதாரராக மார்க்சிஸ்ட் கட்சி சேர உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை சரியாக வழங்கப்படாமலும், மக்களுக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாமலும் உள்ளது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டச் செயலர் அர்ஜூணன் ஆகியோர் உடனிருந்தனர்.