தேர்தல் வரலாற்றில் அதிமுக சாதனை
அதிமுக கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.
அதிமுக கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 37 மக்களவைத் தொகுதிகளைப் பிடித்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் கட்சி என்ற பெருமையும் ஆளும் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளது.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அதிமுக கட்சியை கடந்த 1972 ஆம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே (1973) திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலைச் சந்தித்தது அதிமுக.
அந்தத் தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் அமோக வெற்றி பெற்றார்.
Advertisement
ஒற்றை இலக்கங்களும்...அமோக வெற்றியும்: மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக சில சரிவுகளையும், அமோக வெற்றியையும் பெற்றுள்ளது.
கட்சி தொடங்கிய பிறகு, 1977 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலை முதல் முறையாகச் சந்தித்தது. அதில், 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் அதிமுகவும் இடம்பெற்றது. கடந்த 1979 ஆம் ஆண்டில் சரண்சிங் அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த சத்யவாணி முத்து உள்பட இரண்டு பேர் இடம்பெற்றிருந்தனர். தமிழகக் கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு முதலில் வழிவகுத்துக் கொடுத்தது, அதிமுக.
ஆனால், அதன்பிறகு 20 ஆண்டுகளாக மக்களவைத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிடாததுடன், முத்திரை பதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி எதையும் அதிமுக பெறவில்லை. 1980 ஆம் ஆண்டு 24 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும், 84 ஆம் ஆண்டில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு 12
இடங்களிலும், 1989 மற்றும் 1991 ஆண்டுகளில் 11 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களையும் கைப்பற்றியது.
மீண்டும் மத்திய அமைச்சரவை: 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், அதற்கடுத்து 1998 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகித்தது. 1999 ஆம் ஆண்டு மக்களவைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அதில் 29 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் வென்றது.
அதன்பிறகு மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.
2004 ஆம் ஆண்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாவிட்டாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் மிகச்சிறப்பான வெற்றிகளைப் பெற்றது. 2009 ஆம் ஆண்டு 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 இடங்களிலும், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தனித்துவமான சாதனை: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் புதுவை உள்பட 40 தொகுதிகளையும் திமுக அணி கைப்பற்றியபோதும், அது தனித்து நின்று அனைத்தையும் வென்றதில்லை. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் போதெல்லாம் எப்போதும் அணிசேர்ந்தே தேர்தல் களத்தை கண்டுள்ளது.
ஆனால், இப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்துள்ளது.
1977-ஆம் ஆண்டு முதல்
அதிமுக தொடங்கப்பட்டு இதுவரை அந்தக் கட்சி போட்டியிட்ட தொகுதிகளும், வென்ற தொகுதிகளும் (தேர்தல் நடைபெற்ற ஆண்டுவாரியாக)
ஆண்டுபோட்டியிட்டவைவென்றவை
19772118
1980242
19841212
19891111
19911111
1996100
19982318
19992910
2004330
2009239
20144037