தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு 96 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தேசிய அளவில் அதிக சாலை விபத்து ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. மாநிலத்தில் ஆண்டுக்கு, ஆண்டு சாலை விபத்துகளால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்தாண்டு மாநிலத்தில் ஏற்பட்ட 66,238 சாலை விபத்துகளினால் 15,563 பேர் உயிரிழந்துள்ளனர். 75, 681 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6,513 பேர் பலத்த காயமும், 69,168 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்தாண்டு ஏற்பட்ட 9,750 சாலை விபத்துகளில் 1,247 பேர் இறந்துள்ளனர். 8,700 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 831 பேர் பலத்த காயமும், 7,869 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். சென்னையில் சாலை விபத்துகள் ஏற்படுத்தும் வாகனங்களில் முதலிடத்தில் இரு சக்கர வாகனங்களும், இரண்டாமிடத்தில் லாரிகளும், மூன்றாமிடத்தில் அரசு பேருந்துகளும் இருக்கின்றன. மாநிலத்திலேயே அதிக விபத்து நடைபெறும் நகரத்தில் சென்னையே முதலிடத்தில் உள்ளது.
ஓட்டுநர்கள் தவறு: சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு ஓட்டுநரின் தவறு, பாதசாரிகளின் தவறு, வாகனங்களின் கோளாறு, பழுதடைந்த சாலை, மோசமான காலநிலை போன்றவை முக்கிய காரணங்களாகும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விபத்துகளை ஆராயும் காவல்துறை, அந்த விபத்துக்கான காரணத்தையும் கண்டறிந்து பதிவு செய்கிறது. இவ்வாறு கடந்தாண்டு ஏற்பட்ட 66,238 சாலை விபத்துகளில் 63,658 விபத்துகள் ஓட்டுநர்களின் தவறுதலால் நடந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக பாதசாரிகளால் 1,007 விபத்துகளும், வாகனங்களில் ஓட்டுநரை தவிர்த்து பிறர் செய்யும் தவறுகளால் 779 விபத்துகளும், வாகனங்கள் பழுதால் 206 விபத்துகளும், பழுதான சாலைகளால் 140 விபத்துகளும், மோசமான காலநிலையால் 97 விபத்துகளும் ஏற்பட்டிருப்பதாக காவல்துறை கூறுகிறது.
அனுபவமின்மையும், அவசரமும்: சாலை விபத்துகளுக்கு சுமார் 96 சதவீதம் ஓட்டுநர்களின் தவறுதலே காரணம் என்று இந்தப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்த நிலைமையே ஆண்டுதோறும் நீடிப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநர்களின் போதிய அனுபவம் இன்மையும், அவசரமும், கவனக்குறைவும், பொறுப்பு இன்மையும் ஒவ்வொரு விபத்துக்கும் காரணமாக இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பல்லாவரம் விபத்துக்கும் ஓட்டுநர் காரை அதிவேகமாக ஓட்டியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும்போது எவ்வளவு பொறுப்போடு செயல்பட வேண்டும் என அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அது ஓட்டுநர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.
சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்களிடம், போதியளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவற்கு இன்னும் விதிமுறைகளை கடுமையாக்கினால், தரம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழப்புகள் ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி போலீஸாரும், போக்குவரத்துத் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயங்களை நிறைவேற்றினாலேயே பெருமளவு விபத்துகளை குறைப்பதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உயிரைப் பறிப்பதில் ஜி.எஸ்.டி. சாலை முதலிடம்
சென்னையில் சாலை விபத்துகள் மூலம் அதிக அளவில் உயிரைப் பறிக்கும் சாலைகளில், ஜி.எஸ்.டி. சாலை முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பூந்தமல்லி சாலை, ராஜீவ்காந்தி சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இத் தகவலை காவல்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கிராண்ட் சதர்ன் டிராங்க் சாலை எனப்படும் ஜி.எஸ்.டி. சாலை சென்னையில் இருந்து திருச்சி வரை இருந்தாலும், இந்தச் சாலையில் ஏற்படும் விபத்துகளில் 50 சதவீதம் சென்னையிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுமே நடைபெறுவதாக காவல்துறை தெரிவிக்கிறது.
இந்தச் சாலையின் மூலமே மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தலைநகரான சென்னைக்கு வர முடியும் என்பதால், இந்தச் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சாலையின் மூலம் சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லாரிகள், 2,500 தனியார் ஆம்னி பேருந்துகள் வருகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில், விபத்துகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அக்கறையோடு அரசு எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கருத்தாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.