எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில், தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கமாகும்.
எச்.ஐ.வி. நோயைக் கண்டறிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நம்பிக்கை மையங்கள், பொது கூட்டாண்மை மையங்கள், பரிசோதனை, ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 52 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 149 இணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 16 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுவர கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை, எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 மாத ஓய்வூதியம், முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்பை தளர்த்தி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
பசுமை வீடு கட்டும் திட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. "எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம், எய்ட்ஸ் உள்ளோரை அரவணைப்போம்' என உலக எய்ட்ஸ் தினத்தில் உறுதியேற்போம் என்றார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.