முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் பல்கலை. மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக அறிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கோரிக்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, ஏழை, எளிய மக்கள் உயர் சிகிச்சை பெறும் வகையில் தமிழகஅரசின் பல்நோக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, ஏழை, எளிய மக்கள் உயர் சிகிச்சை பெறும் வகையில் தமிழகஅரசின் பல்நோக்கு மருத்துவமனையாக அறிவிக்கவேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர்குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கும் ஒன்றும் வேறுபாடு இல்லை. காங்கிரஸ் அரசு செய்த செய்த தனியார் மய கொள்கையைதான், மோடி அரசு தற்போது அதிகமாக செய்கிறது. அதேபோல் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு மக்களை பாதிக்கும் செயல்பாடாக உள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியை சுற்றி 10-க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு வாழும் ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல், பன்னாட்டு முதளாளிகள் லாபம் கொழிக்கவே மத்திய,மாநில அரசு செயல்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 50 சதவீத பேருந்துகளை சிதம்பரம் - சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவா, சுதாகர், ஜெயசீலன், வினோபா, விவசாயிகள் சங்க ஒன்றிய அமைப்பாளர் கருனைச்செல்வம், வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக பரங்கிப்பேட்டை நகரில் நடைபெற்ற மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி மக்கள் சந்திப்பு பிரசாரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.