விருதுநகர் அருகே சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டை நிரந்தரமாக அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது. இந்தக் கேட்டை கடந்துதான் கூரைக்குண்டு, மாத்தநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை வரையிலான சாலையில் பொதுமக்கள் செல்ல வேண்டும். மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்கும் வருவதற்கும் குறுக்க சாலையாக உள்ளது. இந்நிலையில், ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்வ்தாக கூறி ரயில்வே நிலைய அதிகாரிகள் தாற்காலிகமாக கடந்த ஒரு வாரமாக திறக்காமல் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால், கூரைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட ரயில்வே கேட் பகுதியில் நிரந்தரமாக அடைக்கும் வகையிலான தடுப்பு சுவர் வேலை நடந்து வருவது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இக்குறிப்பிட்ட இடத்தில் கேட் பராமரிப்பு செய்வதாக கூறிவிட்டு தடுப்பு சுவர் எழுப்ப கூடாது என்பதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் இப்பணியை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் வேலாயுதம் தலைமையில் கிராம மக்கள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்த ரயில்வே நிலைய பொறியாளர் ஞானசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் ஊராட்சி தலைவர் வேலாயுதம் மற்றும் கிராம மக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், மதுரை ரயில்வே கோட்ட பொறியாளரிடம் நேரில் சென்று முறையிடுமாறு அதிகாரிகள் தெரிவி்த்தனர். அது வரையில் பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைப்பதாக உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.