வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் மதுக்கடை முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் மதுக்கடை முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இதனிடையே, அங்கிருந்த மதுக்கடையை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
கலிங்கப்பட்டியில் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாய் மாரியம்மாள் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அன்றிரவு கலிங்கப்பட்டி வந்த வைகோ தாயுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
வைகோ போராட்டம்: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. உடனே பொது மக்கள் வைகோ தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 4 மணியளவில் வைகோ தலைமையில் பொது மக்கள் மதுக்கடை நோக்கிச் சென்றனர்.
அவர்களுள் ஒருவர் அருகிலுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் சில அடி உயரம் ஏறி நின்று கொண்டு, மதுக்கடையை மூட வேண்டும். இல்லையேல் கீழே குதித்து விடுவேன் என்றார். மக்கள் அப்பகுதியை நோக்கிச் சென்றபோது போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பதற்றம் நிலவியதால் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தியதால் பொது மக்கள் சிதறி ஓடினர்.
இந்நிலையில் கூட்டத்தினரில் சிலர் டாஸ்மாக் மதுக்கடைக்குள் நுழைந்து அங்கிருந்த மதுப்புட்டிப் பெட்டிகளைத் தூக்கிவந்து சாலையில் போட்டு உடைத்தனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதும் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
போலீஸார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, வைகோ மீண்டும் டாஸ்மாக் மதுக் கடை முன் காவல்துறையினரை கண்டித்து வேனில் நின்றவாறு பேசினார்.
இதனிடையே தென்காசியில் நடைபெறும் விழாவுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலிங்கப்பட்டிக்கு வந்து மதிமுகவினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை மாற்றிடும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக வைகோ குற்றம் சாட்டினார்.
இந்த வன்முறையில், மதுப்புட்டிகளை பொது மக்கள் உடைத்ததில் ரூ. 7.25 லட்சம் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டதாக டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர். தற்போது கலிங்கப்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு மதுக்கடையை சேதப்படுத்தியதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாமுதீன் உள்ளிட்ட 152 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி உள்பட 12 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.